தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் ரூ. 60,000 கோடியை விரைவில் தொடும்- ஸ்டாலின்

posted in: வர்த்தகம் | 0

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் விரைவில் ரூ. 60,000 கோடியை எட்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் எப்ஐசிசிஐ நிறுவனம் சார்பி்ல் நடந்த நிகழ்ச்சியில் அட்வான்டேஜ் தமிழ்நாடு [^] என்ற புத்தகத்தை வெளியிட்டார் ஸ்டாலின்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளின் அளவு இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரூ. 60,000 கோடியாக உயரும் என்று நம்புகிறோம்.

தற்போது ரூ. 9000 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான திட்டங்கள் இறுதிக் கட்ட பரிசீலனைகளில் உள்ளன.

இந்தியாவிலேயே தொழில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு மதிக்கப்படுகிறது.

1927ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தொழில் வர்த்தக சபை (எப்ஐசிசிஐ) தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 1931ம் ஆண்டு நடைபெற்ற இந்த அமைப்பின் 4வது ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்று பேசிய நம்முடைய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், தொழில் துறையினர் ஏழைகளின் சேவகர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்களின் அடிப்படையில்தான் நம்முடைய முதல்வர் கருணாநி, அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டு கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குள்ள பல்வேறு வாய்ப்பு வசதிகளை விவரித்து இந்த நூலை வெளியிட்டுள்ள பிக்கி அமைப்பை பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்பும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் 21,042 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களும் இவற்றில் அடக்கம். இத்தொழில் நிறுவனங்களில் 15 லட்சத்து 49 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஜவுளி உற்பத்தியை பொறுத்த வரை நாம் முதன்மை மாநிலமாக உள்ளோம். அந்த வகையில், நூற்பு தொழிலில் நாட்டிலேயே 37 சதவீத அளவிற்கு தமிழகத்தின் பங்கு உள்ளது. நாட்டின் நூல் ஏற்றுமதியில் தமிழகம் 60 சதவீத நூல் ஏற்றுமதி செய்கிறது.

மேலும், எந்திரங்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்தியிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்திய அளவில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலத்தில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

தொழில் துறையில் தமிழகத்தை நாட்டிலேயே முதலாவது மாநிலமாக மாற்றுவதற்கு நம்முடைய முதல்வர் கருணாநிதி அதிக அக்கறை எடுத்து பாடுபட்டு வருகிறார்.

2006ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலம் தமிழக தொழில்துறையின் பொற்காலமாகும். உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவும் இந்த கால கட்டத்திலும், தமிழகம் தொழில்துறையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டன. ரூ.800 கோடி மதிப்பில் தோஷிபா டர்பைன்ஸ் தொழில் திட்டம், ரூ.1800 கோடியில் மகேந்திரா அண்டு மகேந்திரா ஆட்டோ மொபைல் தொழில் திட்டம், ரூ.1600 கோடியில் வீடியோகான் தொழில் திட்டம், ரூ.1500 கோடியில் ஜே.கே.டயர்ஸ் தொழில் திட்டம், ரூ.1500 கோடியில் போர்டு விரிவாக்க திட்டம், ரூ.4000 கோடியில் மிக்சலின் டயர் தொழில்திட்டம் போன்றவை அத்தொழில் திட்டங்களாகும்.

தொழில்துறையில் தமிழகம் விரைந்து வளர்ச்சியடைந்து வருவதால், உலக உற்பத்தி மையமாக தமிழகம் உருவாகி வருகிறது என்றார் ஸ்டாலின்

நூலின் முதல் பிரதியை சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதர் அஜித் சிங் பெற்றுக்கொண்டார். பிக்கி அமைப்பின் தலைவர் ரபீக் அகமது வரவேற்று பேசினார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.