தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து வரலாற்று தவறை இழைத்து விடாதீர்கள்: மட்டு. த. தே. கூ. வேட்பாளர் பொன். செல்வராசா

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது வாக்குகளை சிங்கள கட்சிகளுக்கு அளித்து வரலாற்று தவறு விடாமல், தமிழர்களின் ஒரே ஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு குறுமன்வெளியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:-

தமிழர்கள் சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதால் தமிழர்களின் பிரதிநிதிகளாக முஸ்லீம்களும் சிங்களவர்களுமே தெரிவாகும் அபாயம் காணப்படுவதாகவும் இதை உணர்ந்து கொண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தமது வாக்குகளை தமிழர்களின் ஒரேஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்க வேண்டும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைமைத்துவமும் எதிர்காலமும் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டுமே ஒழிய தமிழ் மக்களை அழித்தொழித்த மகிந்த ராசபக்சவின் கையில் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை கொடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சிவநாதன் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக இங்கு பல சுயேச்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் போட்டியிடுவதாகவும், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் வேறு இனத்தவர்களுக்கு செல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரும்பான்மை இனக்கட்சிகளிலிருந்து ஒருபோதும் தமிழர்கள் தெரிவு செய்யப்படப்போவதில்லை என்றும் பெரும்பான்மை கட்சிகளுக்கு தமிழர்கள் வழங்கும் வாக்குகள் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தெரிவு செய்வதற்கே உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மற்றுமொரு வேட்பாளரான யோகேஸ்வரன் பேசுகையில்,

ஆளும் கட்சி மற்றும் அரச ஆதரவுக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தி வரும் கெடுபிடிகள் மனித உரிமை மீறல்கள் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். இவர்களை நிராகரித்து தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பல வழிகளிலும் இந்த அரசும் அரசோடு சார்ந்த குழுக்களும் ஏமாற்றி வருகிறார்கள் எனவும் இதனை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.