சங்கரன்கோவில்-குளத்தில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி

posted in: தமிழ்நாடு | 0

சங்கரன்கோவில்: நெல்லை அருகே குளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ளது பனவடலிசத்திரம். இந்த ஊருக்கு அருகே உள்ளது மடத்துபட்டி. நேற்று அக்கிராமத்தில் உள்ள மகடாஸ்வரி அம்மன் கோவில் ஒருநாள் கொடை விழா நடந்தது.

இதனால் அன்று அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஓன்றிய துவக்கப்பள்ளிக்கு நேற்று பிற்பகல் விடுமுறை விடப்பட்டது. அக்கிராமத்தை சேர்ந்த மாரிராஜ் மகன் செல்வராஜ், காளிபாண்டி மகன் கவுதம், முருகன் மகன் கமல், மாரிச்சாமி மகன்கள் அருண்பாண்டியன், பெரியராஜ், சின்னத்துரை மகன் சிவா ஆகியோர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர்.

தனது மகன்கள் இருவரும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததை கண்டு மாரிச்சாமி அவர்களை தேட துவங்கினார். இரவு சுமார் 7 மணிக்கு அவர் குளக்கரையில் குழந்தைகள் சிலரின் உடைகள் இருந்ததை கண்டு பதறியடித்து ஊருக்குள் வந்து இதுபற்றி தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையம், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனால் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் குளத்திற்குள் இறங்கி சடலங்களை தேடி எடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். இதன் பிறகே 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் கிராமத்தினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் அலறியடித்து குளக்கரைக்கு ஓடினர். குழந்தைகளை இழந்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

நெல்லை கலெக்டர் ஜெயராமன், டிஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி ஆஸ்ரா கர்க் உள்ளிட்ட மாவட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து தேவர் குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான 6 சிறுவர்களின் உடலும் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நள்ளிரவில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. 6 சிறுவர்கள் பலியான சம்பவத்தால் மடத்துப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.