கோவை சிறை அதிகாரி வீட்டில் காவலர்களுக்கு மது விருந்து? கிளம்பியது சர்ச்சை

posted in: தமிழ்நாடு | 0

கோவை : கோவை மத்திய சிறையின் உயரதிகாரி ஒருவர், தனது வீட்டில் சிறைக் காவலர்களுக்கு இரவில் அளித்த விருந்து தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது.


கோவை மத்திய சிறையில், தண்டனை பெற்ற மற்றும் விசாரணை கைதிகள் 2,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு பணியில் 200க்கும் அதிகமான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறை அதிகாரிகள் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இரு கோஷ்டிகளாக செயல்படுவதாகவும், காவலர்களை தங்களது பக்கம் இழுக்க போட்டி போட்டு, “மது விருந்து’ கொடுத்து வருவதாகவும், காவலர்கள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் காவலர்கள் சிலரை, கோவை பாலசுந்தரம் ரோட்டிலுள்ள ஓட்டலுக்கு வரவழைத்த சிறை அதிகாரி ஒருவர், மது விருந்து அளித்ததாக புகார் கிளம்பியது. இது தொடர்பாக, அதிருப்தி காவலர்கள், சிறைத்துறையின் உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர். இந்நிலையில், சிறை உயரதிகாரி ஒருவர், சிறை வளாகத்திலுள்ள தனது வீட்டுக்கே காவலர்களை இரவில் வரவழைத்து, விருந்து அளித்த சம்பவம், சிறை வட்டாரத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக, முதல்வருக்கும், சிறைத் துறை தலைமை அலுவலகத்துக்கும், கோவை மத்திய சிறைக் காவலர்கள் சிலர் அனுப்பியுள்ள மனு: கோவை சிறை அதிகாரிகள் இடையேயான கோஷ்டிப்பூசல், எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. இதனால், ஒரு சில கைதிகளின் கை ஓங்கியுள்ளது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கைதி ஒருவர், தன்னை, “மூலிகை வைத்தியர்’ என்றும், “சாமியார்’ என்றும் கூறிக்கொண்டு பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகிறார். “செக்ஸ்’ உணர்வை தூண்டும் மூலிகை மருந்துகளை தயாரித்து தருவதாக கூறும் இவரது பேச்சை, அதிகாரி ஒருவர் நம்புகிறார். கைதியை, தனது அறைக்கு வரவழைத்து மணிக்கணக்கில் இருக்கையில் அமரச் செய்து பேசுகிறார்; விதிமுறைகளை மீறி சலுகைகளையும் அளிக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த 2ம் தேதி நடந்த சம்பவம், மத்திய சிறைக் காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பிட்ட சில காவலர்களின், “எண்களை’ பட்டியலிட்டு, “நோட்டீஸ் போர்டில்’ அறிவிப்பு செய்த சிறை உயரதிகாரி, அந்த காவலர்களை இரவு 7.30 மணியளவில் தனது வீட்டுக்கு அழைத்து மதுவுடன், பிரியாணி வழங்கி, “பார்ட்டி’ அளித்துள்ளார். இது போன்ற செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவுடன், “பார்ட்டிக்கு’ அழைக்கப் பட்டதற்கான, “நோட்டீஸ் போர்டு’ அறிவிப்பின் நகலும் இணைக்கப்பட் டுள்ளது.

சிறை டி.ஐ.ஜி., விளக்கம்: சிறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து, சிறைத்துறை (கோவை) டி.ஐ.ஜி., கோவிந்தராஜன் கூறியதாவது: சிறைக் காவலர்களை அழைத்து, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் விருந்து அளித்தார் என்பது உண்மை. ஆனால், குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது போன்று, தவறான நோக்கத்துக்காக விருந்து தரப்படவில்லை. தேசிய அளவிலான திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று திரும்பிய, சிறைக் காவலர்களுக்கே விருந்து அளிக்கப்பட்டது. அதே போன்று, சிறையில் சிறப்பாக பணியாற்றி, விதிமீறல்களை தடுத்த காவலர்களை பாராட்டியும் முன்பு ஒரு முறை விருந்து அளிக்கப்பட்டது. நல்ல நோக்கத்துக்காக நடத்தப்பட்ட விருந்தை, காவலர்கள் சிலர் தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். சிறையில் அதிகாரிகளிடையே கோஷ்டிப் பூசல் ஏதுமில்லை. துறைசார்ந்த பணியில் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றனர். இவ்வாறு கோவிந்தராஜன் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.