35 காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்

புதுதில்லி,மார்ச் 15: அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதாவை அவையில் கொண்டுவர முடிவு செய்திருந்தபோது மக்களவைக்கு ஏன் வரவில்லை என்று கேட்டு சில அமைச்சர்கள் உள்பட 35 எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப காங்கிரஸ் கட்சித் தலைமை முடிவு செய்திருக்கிறது.


நாடாளுமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும், அவை நடவடிக்கைகளில் அக்கறை காட்ட வேண்டும், மசோதாக்களை அறிமுகம் செய்யும்போது அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்க அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தன்னுடைய உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அப்படியிருந்தும் திங்கள்கிழமை காலை அவை கூடியபோது சில அமைச்சர்கள் உள்பட 35 காங்கிரஸôர் அவைக்கே வரவில்லை. அத்துடன் திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பலரும் வரவில்லை.
இந்த நிலையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டால் அதை அறிமுக நிலையிலேயே நிராகரிக்க விரும்புகிறோம் என்று யஷ்வந்த் சின்ஹா (பாஜக) நோட்டீஸ் அளித்திருந்தார்.
அந்த மசோதா தேச நலனுக்கு எதிரானது என்பதால் இடதுசாரி கட்சி உறுப்பினர்களும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கூட எதிர்க்கும் முடிவில் இருந்தனர் என்பதை அரசுத் தரப்பு தெரிந்துகொண்டுவிட்டது.
அத்துடன் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சின்ஹா வற்புறுத்தினால் ஆளும் கூட்டணி தரப்பில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் அறிமுக நிலையிலேயே மசோதா தோற்றிருக்கும் என்று அரசுத் தரப்பு உணர்ந்துள்ளது. எனவேதான் காரண விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி மசோதாவைத் தாக்கல் செய்யாமல் ஒத்திவைக்கவில்லை, போதிய உறுப்பினர்கள் அவையில் இல்லாததால்தான் ஒத்திவைக்க கட்சித் தலைமை முடிவு செய்தது என்று தில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
திங்கள்கிழமை காலையில் மக்களவையில் ஆளும் கூட்டணியின் உறுப்பினர்கள் போதிய அளவில் இல்லை என்ற தகவல் கட்சிக் கொறடாக்கள் மூலம் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவை முன்னவராகச் செயல்படும் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே மசோதாவை தாக்கல் செய்யாமல் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.