கலைஞர் வீட்டு வசதி திட்ட வீடுகள் யாருக்கு

posted in: தமிழ்நாடு | 0

திருநெல்வேலி, மார்ச் 15: தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில், ஒரே குடிசை வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காது. ஒரு வீடு மட்டுமே கிடைக்கும்.


தமிழ்நாட்டில் குடிசைகள் இல்லாமல் செய்வதே அரசின் நோக்கம் என்றும், அனவருக்கும் வீடு கட்டிக் கொடுப்பது நோக்கமல்ல என்றும் குடிசைகள் குறித்து கணக்கெடுக்க அரசு விதித்துள்ள விதிமுறைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில், முதல் கட்டமாக கிராமப்புறங்களில் குடிசை வீடுகளில் வசித்து வருவோருக்கு கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட உள்ள இந்த வீடுகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்ய கிராமப்புறங்களில் குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் இம் மாதம் 29 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணி ஏப்ரல் மாதம் நிறைவு பெறும்.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர் குடிசைகளை (பயனாளிகளை) கணக்கெடுக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளின் சுருக்கம்:
குடிசை வீட்டின் சுவர் செங்கல் அல்லது மண்ணால் கட்டப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கூரை மட்டும் ஓலையால் வேயப்பட்டிருக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸ் சீட், ஓடு போன்றவற்றை வேய்ந்து அதற்கு மேல் ஓலை போட்டிருந்தால் அந்த குடிசை தகுதி பெறாது. வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி மட்டுமே ஓலையால் வேயப்பட்டு, எஞ்சிய பகுதிகள் ஓடு அல்லது ஆஸ்பெஸ்டாஸ் அல்லது கான்கிரீட் போடப்பட்டிருந்தாலும் அந்த குடிசை தகுதி பெறாது. குடிசை வீடானது மனிதர்கள் வசிப்பிடமாக இருக்க வேண்டும். ஆடு, மாடு கொட்டகைகள், கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்க கூடாது.
குடிசை வீட்டில் அதன் உரிமையாளர் மட்டுமே குடியிருக்க வேண்டும். வாடகைக்கு விடப்பட்டுள்ள குடிசைகள் தகுதி பெறாது. ஒரே குடிசையில் எத்தனை குடும்பங்கள் வசித்து வந்தாலும், அந்த ஒரு குடிசைக்கு பதிலாக ஒரு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். அந்த குடிசையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்பட மாட்டாது.
குடிசை வீட்டில் குடியிருப்போருக்கு வேறு எங்காவது அரசு திட்டத்திலோ அல்லது சொந்த பணத்திலோ கட்டிய “பக்கா’ வீடுகள் இருக்க கூடாது. குடிசை வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் (கணவன், மனைவி, மகன், மகள்) மகன் அரசு திட்டத்தில் “பக்கா’ வீடு பெற்றிருந்து அவர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தந்தையுடன் குடிசையில் வசித்து வந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. ஆனால், மகன் தனியாக வசித்துக் கொண்டு இதர உறுப்பினர்கள் குடிசையில் வசித்து வந்தால் அவர்கள் பயன் பெறலாம்.
குடிசை வீடுகளை கணக்கெடுக்க கிராம நிர்வாக அதிகாரி, மக்கள் நலப் பணியாளர், கிராம உதவியாளர் ஆகியோரைக் கொண்ட மூவர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வந்து கணக்கெடுக்கும்போது அவர்களிடம் குடிசை வீட்டில் வசிப்போர் அந்த நிலத்திற்கான வில்லங்கம் இல்லாத பட்டா (குடும்ப உறுப்பினரில் யார் பெயரில் வேண்டுமானாலும் இருக்கலாம்), கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பயனாளியின் பெயர் இடம் பெற்றுள்ளதற்கான அத்தாட்சி, குடும்ப அட்டை நகல், மின் இணைப்பு பெற்றுள்ளதற்கான அத்தாட்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும். பட்டாவுடன், இதர அத்தாட்சிகளில் ஏதேனும் இரண்டை கொடுத்தால் கூட போதுமானது.
இந்த ஆவணங்களை உடனடியாக கொடுக்க முடியாதவர்கள், அந்த ஊரில் குழுவினர் கணக்கெடுத்து முடிப்பதற்குள் கொடுக்க வேண்டும். அல்லது அந்த கணக்கெடுப்பை மேல் ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும்போது கொடுத்துவிட வேண்டும்.
குடிசை வீடுகளை பூட்டிவிட்டு தொழில் நிமித்தம் வெளியூர் சென்றுள்ளவர்களின் குடிசைகள் பூட்டப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு குழுவினர் பதிவு செய்து கொள்வார்கள்.
இந்த குழுவின் கணக்கெடுப்பு அல்லது அதிகாரிகளின் மேல் ஆய்வு முடிவதற்குள் குடிசையின் சொந்தக்காரர் வந்து விவரங்களை தெரிவித்து ஆவணங்களை அளிக்கலாம். அதிலும் காலதாமதமாகி விட்டால் அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
ஆட்சேபிக்ககூடிய புறம்போக்கு நிலங்களான ஆறு, கால்வாய், குளம், குட்டை, ஓடை, அனைத்து நெடுஞ்சாலைகள், கிராமச் சாலைகள் மற்றும் சாலை புறம்போக்கு,
சுடுகாடு, காப்புக் காடுகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், உள்ளாட்சிகள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகளுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட மாட்டாது.
இந்த திட்டத்தில் பயன்பெற வருமானம் ஒரு தடையல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நிலச்சுவான்தாரராகவோ, தொழிலதிபராகவோ கூட இருந்து கொண்டு குடிசையில் வாழ்ந்து வந்தால் அவருக்கும் அரசினó கான்கிரீட் வீடு கிடைக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர். மகன் வெளிநாட்டில் வசித்து வந்தாலும், தந்தையும், தாயும் சொந்த ஊரில் குடிசையில் வசித்து வந்தால் அவர்களுக்கு வீடு உண்டு என்றும் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.