சிறிலங்கா படையினர் எங்கள் மனங்களை மாற்ற முயல்கின்றார்கள் என்கிறான் ஒரு பல்கலைக்கழக மாணவன் – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

கனவுகளுக்கும் பயங்கர அனுபவங்களுக்கும் இடையில் வாழ்கின்றனர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.

உற்சாகமிழந்து காணப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் மத்தியில் இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாகப் பேசிக்கொள்கிறார்கள்.

சிறிலங்காப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போரில் ஒரு பையன் தனது இரண்டு கால்களையும் தனது குடும்பத்தையும் இழந்துவிட்டிருந்தான்.

இன்னொரு பிள்ளை தனது குடும்பத்தை இழந்துவிட்டிருந்தாள்.

இடம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து இவர்கள் இருவரும் யாழ். பல்கலைக்கழகம் திரும்பினார்கள்.

ஆனால், பல்கலைக்கழகத்தில் இவர்களால் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க முடியவில்லை.

“ஏனையவர்களைப் போல எங்காளால் வாழமுடியவில்லையே” என்கிறது தமது தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிவைத்த கடிதம்.

5000 மாணவர்களைக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 345 மாணவர்கள் தங்களது வாழ்க்கையினை மீளவும் கட்டியெழுப்ப முனைகிறார்கள்.

விடுமுறையின் போது வன்னியிலுள்ள தமது வீடுகளுக்குச் சென்றிருந்த இந்த மாணவர்களால் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் திரும்பமுடியாமல் போய்விட்டிருந்தது.

போரின் மத்தியில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

இறுதிப் போரின் மத்தியில் அகப்பட்டு மீண்ட இந்த மாணவர்களுள் குறிப்பிட்ட தொகையுடையோரை Hindustan Times ஏட்டின் சார்பில் Sutirtho Patranobis சந்தித்தார்.

2007-2009 வரையான காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து பின்வாங்கியபடி இருந்தார்கள்.

விமானப் படையினர் தொடர் வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்த அதே வேளை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டிருந்தது.

சிறிய பதுங்கு குழிகளில் நாட்கணக்காகத் தாம் அடைபட்டுக் கிடந்த, தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்த அந்தப் பயங்கரச் சம்பவங்களை அவர்கள் விபரிக்கிறார்கள்.

இவர்களில் சிலர் விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, இரண்டு மாதப் பயிற்சியின் பின்னர் களமுனைகளில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

புலிகளால் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்படலாம் என அஞ்சி இறுதி போரின் போது திருமணம் செய்த சில பல்கலைக்கழக மாணவிகள் கையில் குழந்தைகளுடன் காணப்படுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆட்திரட்டலிலிருந்து தப்பவேண்டுமெனில் – ஒன்று காயப்பட்டிருக்கவேண்டும் அல்லது திருமணம் செய்திருக்கவேண்டும்.

திருமணம் ஆகி குடும்பமாய் வாழ்ந்தோரை அவர்கள் ஆட்திரட்டலுக்கு உட்படுத்தவில்லை என போரின் இறுதி நாட்களில் திருமணம் செய்து கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு மாணவி குறிப்பிட்டார்.

“மரணத்தின் நிழலில் நாங்கள் வாழ்ந்தோம். முள்ளிவாய்க்காலில் நாங்கள் பதுங்கியிருந்த பதுங்குகுழியின் அருகேயிருந்த தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. இதன்போது 60க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்” என ஒரு பிள்ளையின் தாயும் கலைப்பீட மாணவியுமாகிய யசோதா தெரிவித்தார்.

மே 2009இல் மோதல்கள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அடைபட்டுக்கிடந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகம் திரும்புவதற்குப் பல மாதங்கள் ஆனது.

பல்கலைகழக அதிகாரிகளின் கடுமையான முயற்சியின் பின்னரே இந்த மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

இறுதிப் போரின் போது சிதைந்து சின்னாபின்னம் ஆகிப்போன கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே இவர்கள்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு மாணவன் இராணுவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.

“ஒரு மாதத்திற்கும் மேலாக நான் சித்திரவதைக்கு உள்ளானேன். என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள்; பொலித்தீன் பைகளால் எனது தலையினை இறுகக் கட்டினார்கள்” என அந்த மாணவன் தனக்கு நேர்ந்த அவலத்தினை விபரிக்கிறான்.

ஒரு மாதத்தின் பின்னர் அந்த மாணவனைப் பிறிதொரு இடத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கு அவனுக்கு கணனிக் கற்கையான MS Office கற்பிக்கப்பட்டதோடு சிறிலங்காவின் தேசியக் கொடியினை எவ்வாறு ஏற்றுவது என்றும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

“சிறிலங்கா படையினர் எங்களது மனதை மாற்ற விரும்புகிறார்கள்” என்றான் அந்த மாணவன்.

நாதன் மற்றும் குகன் போன்ற பல மாணவர்கள் போரின் போது காயமடைந்திருக்கிறார்கள்.

எறிகணைச் சிதறல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் இவர்களது உடல்களைப் பதம் பார்த்திருக்கிறது.

வெளிச்சத்தினை நேரடியாகப் பார்க்கும் போது கண் கூசுவதாகவும் பெரிய சத்தங்கள் காதினுள் ஏதோ செய்வதாகவும் கூறும் நாதனுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறது.

சிறந்ததொரு வாழ்வினைத் தொடருவதற்காக தாம் வெளிநாடு செல்லவே விரும்புவதாக இவர்களில் பலரும் கூறுகிறார்கள்.

ஆனால், இழந்துவிட்ட பொன்னான காலத்தினை இவர்கள் மீளவும் பெறுவார்களா?

“இரண்டு தொடக்கம் மூன்று கல்வியாண்டுகளை இந்த மாணவர்கள் தவறவிட்டிருக்கிறார்கள், இருந்தாலும் திறமையான மாணவர்களாக இருக்கும் இவர்கள் கடுமையாகப் படிக்கும் உறுதியுடன் இருக்கிறார்கள்” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கம் கூறுகிறார்.

பழையதை மறந்து சிறந்த எதிர்காலத்திற்காக முன்னோக்கிப் பயணிப்பதில் இந்த மாணவர்கள் உறுதியாக இருப்பார்களெனில் இழந்துவிட்ட கல்வியை இவர்கள் மீளவும் பெறுவார்கள்.

[மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டிருக்கின்றன]

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் – இது புதினப்பலகை இணையத் தளத்திற்காக தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Source & Thanks : .puthinappalakai

Leave a Reply

Your email address will not be published.