4-வது ஆண்டாக வரி இல்லை: மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்; புதிய புற்றுநோய் ஆஸ்பத்திரி ; கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு; மாணவ- மாணவிகளுக்கு பரிசு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. மேயர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து 4-வது முறையாக வரி இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் தனது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் ஆட்சியின் மாண்பை உணர்த்தும் வகையில் திராவிட பழமையையும், பொறியியல் புதுமையையும் கொண்ட புதிய சட்டமன்றத்தை உருவாக்கி ஓய்வின்றி உழைத்து வரும் முதல்- அமைச்சர் கலைஞரை வணங்குகிறேன்.

தமிழக மக்களின் உள்ளங்களில் நிறைந்து விளங்கும் துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டி வரும் பாதையில் சென்னை மாநகராட்சி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2010 – 2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வதில் மாநகராட்சி பெருமை அடைகிறது.

மாநகராட்சியின் பள்ளிகள் இனி சென்னை தொடக்கப் பள்ளி, சென்னை நடுநிலைப் பள்ளி, சென்னை உயர் நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி என்று அழைக்கப்படும் பள்ளிகளில் புதிய நூலகங்கள் உருவாக்கப்படும். மாணவர்களின் அறிவுத்திறனுக்கும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஆற்றல்சார் பள்ளிகள் தொடங்கப்படும்.

அனைத்து பள்ளிகூடங்களிலும் சைக்கிள் நிறுத்துமிடம் அமைக்கப்படும். மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான வர்ணம் தீட்டப்படும். மாணவ- மாணவிகள் வேலை வாய்ப்பு அம்சங்களை தெரிந்து கொள்வதற்காக வேலைவாய்ப்பு தகவல் மையம் தொடங்கப்படும்.

மழலையர் பள்ளிகளில் படிக்கும் 2100 மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக சீருடை மற்றும் புத்தகப்பை, ஷூ வழங்கப்படும்.

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 61 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு ஜாமென்டரி பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். மேலும் பென்சில், பேனா, ரப்பர், ஷார்பனர் அடங்கிய சிறிய டப்பாவும் இலவசமாக வழங்கப்படும்.

மாணவிகளுக்கு இலவச நாப்கின் தொடர்ந்து இந்த ஆண்டும் வழங்கப்படும். மாணவர்கள் கம்ப்யூட்டர் மூலம் படிக்கும் வகையில் முன்னோடி திட்டமாக வட சென்னையிலும், தென் சென்னையிலும் ஒரு கணித ஆய்வகம் அமைக்கப்படும்.

மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கபரிசு வழங்கப்படும். 10-ம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்புகளுக்கு செல்லும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் 20 பேருக்கு ரூ. 3ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு கல்வி தொகை வழங்கப்படும்.

கொளத்தூர், சுப்பராயன் தெரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக வரும் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும். அதேபோல் எம்.எம்.டி.ஏ. காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியாகவும், எம்.எம்.டி.ஏ. காலனி மிமி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெண்கள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. பள்ளிகளில் அன்றாடச் செலவுகளுக்காக தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ. 3ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.5ஆயிரம், உயர்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.15 ஆயிரம் நிதியாக வழங்கப்படும்.

பள்ளிகளில் மாணவிகள் பயன்படுத்தும் நாப்கின்களை எரித்து சாம்பலாக்கும் கருவி நிறுவப்படும். தற்போது தண்டையார் பேட்டையில் மட்டும் தொற்று நோய் ஆஸ்பத்திரி உள்ளது. தொலை தூரங்களில் இருந்து வருபவர்கள் எளிதாக சென்று சிகிச்சை பெற தென்சென்னையில் மாடப்பாக்கத்தில் 200 படுக்கை வசதியுடன், 10 வார்டுகள் கொண்ட புதிய தொற்றுநோய் ஆஸ்பத்திரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய சர்க்கரை நோய் பரிசோதனைமையம் ஏற்கனவே இயங்கி வரும் ரத்த பரிசோதனை கூடங்களில் அமைக்கப்படும். வட சென்னை மற்றும் தென் சென்னையில் 2 டயாளிசிஸ் மையங்கள் தொடங்கப்படும். வட சென்னை மற்றும் தென் சென்னையில் 2 கண் பரிசோனை மையங்கள் தொடங்கப்படும். தற்போது இலவசமாக அமரர் ஊர்தி சேவை செய்யப்படுகிறது. இதை மேலும் துரிதமாக செய்ய கூடுதலாக 10 அமரர் ஊர்தி வாகனங்கள், 20 மின் குளிர்சாதன அமரர் பெட்டிகள் வாங்கப்படும்.

விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கப்பட்டு ஒலி- ஒளி அமைப்பு செய்யப்படும். சென்னையில் 6 இடங்களில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலங்கள் அமைக்கப்படும். குத்தகை நிலங்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் வணிக வளாகத்தில் மாற்றங்கள் செய்து அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

மெரீனா கடற்கரை அருகே 1 ஏக்கர் நிலப்பரப்பில் சிங்கப்பூரில் உள்ளது போல் ஆர்கிட் மலர் தோட்டம் அமைக்கப்படும். மாநகராட்சி சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

பூங்காக்களில் மேடைகள் அமைத்து, யோகாபயிற்சி அளிக்கப்படும். தியாகராயநகரில் உள்ள நடேசன் பூங்கா, அண்ணாநகர் விஸ்வேஸ் வரய்யா பூங்கா, ஆகியவை விரைவில் திறக்கப்படும்.

விளையாட்டு திடல்களில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் வலை பயிற்சி அளிக்க வசதிகள் செய்யப்படும். மாநகராட்சியில் காலியாக உள்ள 1213 பதவிகளுக்கு விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதலாக 10 இடங்களில் சொத்து வரி செலுத்தும் மையங்கள் அமைக்கப்படும். சொர்ணஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்படும்.

ரிப்பன் கட்டிடம் படம் பொறித்த தபால் தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் சென்னை மாநகராட்சியும் பங்கு பெறுகிறது. மாநகராட்சி பணிகளை சித்தரிக்கும் வகையில் ஒரு அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்படுகிறது

சென்னையில் உள்ள 50 முக்கிய சாலைகளுக்கு தமிழ் அறிஞர்கள் பெயர் சூட்டப்படும். அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் திருக்குறள் பொறிக்கப்பட்ட பலகைகள் அமைக்கப்படும். வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் முதலில் தமிழில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தப்படும். மாநகராட்சியின் இணையதளம் தமிழில் அறிமுகப்படுத்தப்படும்.

மாநகராட்சி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

சாலை ஒரங்களில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்காக இரவு நேர காப்பகம் தொடங்கப்படும். மயான பூமிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அழகுபடுத்தி பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கொசுக்களை கட்டுப்படுத்த மதுரையில் உள்ள மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து ஒரு பெருந்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்கள் தங்கி கிசிக்கை பெறும் நாட்களில் இலவச உணவு வழங்கப்படும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை கதகதப்பாக வைத்துக்கொள்ள மெத்தையுடன் கூடிய பாதுகாப்பு வலை இலவசமாக வழங்கப்படும்.

வளர் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும். மாநகராட்சியில் உள்ள 93 நலவாழ்வு மையங்களிலும் டி.வி. பொருத்தப்படும். மகப்பேறு மையங்களில் உள்நோயாளிகளின் குழந்தைகளுக்காக விளையாட்டு பொழுது போக்கு கூடம் அமைக்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள், சாலைப்பணியாளர்கள் போன்ற அடிப்படை பணியாளர்களை கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடுகள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க இலவச சணல்பை வழங்கப்படும்.

சைதாப்பேட்டை- ஆலந்தூர் சாலையில் நவீன குப்பை மாற்று நிலையம் அமைக்கப்படும். தண்ணீர் தேவை இல்லா சிறுநீர் கழிப்பிடங்கள் நகரில் அமைக்கப்படும். தெருக்களை சுத்தப்படுத்த ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு எந்திரப் பெருக்கி வாங்கப்படும்.

மாநகராட்சி பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

முக்கிய சாலை சந்திப்புகளில் மணிக்கூண்டுகள் அமைக்கப்படும். பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நச்சுபுகைத் தன்மையை கட்டுப்படுத்தவும் தனியாக சைக்கிள்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்படும். தியாகராய நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். பார்க்கிங் வசதிகளை மேம்படுத்த புதிதாக கொள்கைகள் உருவாக்கப்படும்.

அண்ணாநகர், புரசைவாக்கம், அடையாறு பகுதிகளில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். ரோட்டோரங்களில் ஆட்டோமெட்டிக் வாகன நிறுத்த கட்டண வசூல் பெட்டகங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் தமிழ் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தை சித்தரிக்கும் சிலைகள் அமைக்கப்படும். சென்னையில் உள்ள உள்புற தார்ச்சாலைகள் ரூ.101.87 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். குடிசைப்பகுதிகளில் ரூ.72.63 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.