பென்னாகரம் இடைத்தேர்தல் ; கருணாநிதி பிரசாரம் இல்லை ; பொறுப்புகள் உடன்பிறப்புகளிடம் ஒப்படைப்பு

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: வரும் 27 ம் தேதி பென்னாகரம் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த கம்பம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் முதல்வர் கருணாநிதி பிரசாரம் செய்யவில்லை. இருப்பினும் தொண்டர்கள் உழைத்து அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் பென்னாகரம் தொகுதிக்கு வரும் 27 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த தேர்தலில் எவ்வளவு ஓட்டு ? இந்த தொகுதியில் இன்பசேகரன் (தி.மு.க.,), அன்பழகன் (அ.தி.மு.க.,) , தமிழ்குமரன் (பா.ம.க.,), காவேரி வர்மன் ( தே.மு.தி.க.,) வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் 2006ம் ஆண்டு பொதுத்தேர்தலை பொறுத்தமட்டில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஒட்டுக்கள் விவரம் வருமாறு: பெரியண்ணன் (தி.மு.க.,): 74 ஆயிரத்து 109 , வெற்றிவேல் (அ.தி.மு.க.,): 47 ஆயிரத்து 177, தண்டபாணி (தே.மு.தி.க.,), 10 ஆயிரத்து 567 , சுயேச்சையாக போட்டியிட்ட சந்தன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி 9 ஆயிரத்து 863 ஓட்டுக்களும் பெற்றனர்.

யாருக்கு எவ்வளவு பலம் ? இந்த இடைத்தேர்தலில் தி.மு.க., வழக்கமாக கையாளும் பார்முலா ஜரூராக நடக்க துவங்கியுள்ளது. இங்கு வாக்காளர் ஒருவருக்கு ரூ.ஆயிரம் வீதம் வீடு தேடி கவர் சேர்க்கப்பட்டு விட்டதாக அங்கிருக்கும் எமது நிருபர் குழுவினர் தெரிவிக்கின்றனர். எனவே இந்த தொகுதியில் தி.மு.க., வெற்றிக்கு பெரும் சிரமம் இருக்காது என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.

இதனால் முதல்வர் கருணாநிதி சென்று பிரசாரம் செய்துதான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இல்லை என தி.மு.க., தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக, முந்தையஇடைத்தேர்தலை கூறுகின்றனர். அந்த இடைத்தேர்தல்களிலும் கருணாநிதியின் பிரசாரம் இல்லாமலேயே தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. மேலும் ஒரு பலம் என்னவென்றால் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் மறைந்த பெரியண்ணன் மகன் என்பதால் இவருக்கு தொகுதி மக்களின் அனுதாபமும் கிடைக்கும். அதிரடியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் பா.ம.க., வின் செல்வாக்கு சற்று குறைந்திருப்பதாகவும், சில இடங்களில் பா.ம.க., வினர் தி.மு.க., தொண்டர்களை எதிர்க்கும் சக்தி ( ஆள்பலம் ) படைத்தவர்களாக மட்டும் உள்ளனர். ஓட்டுக்கள் எவ்வளவு பெறுவார்கள் என்பது பெரும் கேள்வி . அ.தி.மு.க.,வை பொறுத்தவரை போட்டியிடும வேட்பாளர் அன்பழகன் தாழப்பள்ளம் , பாறைப்பட்டி பகுதி கிராமத்தில் ஒரளவுக்கு செல்வாக்கு உள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக பலமான பிரசாரம் எதுவும் செய்யவில்லை என்பதால் அ.தி.மு.க., தொண்டர்கள் சோர்ந்து காணப்படுகின்றனர். இங்கு குடி நீர் தட்டுப்பாடு மற்றும் வேலையின்மையே முக்கிய பிரச்னையாக உள்ளது. இதை எதிர் கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஜெ., பிரசாரம் : வரும் 22 , 23 தேதிகளில் ஜெயலலிதாவும், 20 ம் தேதிக்கு மேல் விஜயகாந்தும், பிரசாரம் செய்கின்றனர். முதல்வர் கருணாநிதி பிரசாரத்திற்கு வருவார் என்று ஒரு தரப்பினரும் , வரமாட்டார் என ஒரு தரப்பினரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக முதல்வரின் பிரசார விவரம் இது வரை வெளியிடப்படவில்லை . ஆனால் சென்னை வட்டாரத்தில் விசாரித்த போது தலைவர் பிரசாரத்திற்கு சென்று தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை இல்லை. பிரசாரத்திற்கு உடல் நலமும் ஒத்துழைக்காது. எல்லாம் அமைச்சர்களும், தொண்டர்களும் வாக்காளர்களை நன்கு கவனித்து வெற்றி பெற செய்து விடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முதல் ரவுண்ட் பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. அடுத்த ரவுண்ட் பணம் எப்போது வரும் என்ற கேள்விதான் பென்னாகரத்தில் இப்போது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.