அணு இழப்பீடு மசோதா : திடீர் ஒத்திவைப்பு

புதுடில்லி : லோக்சபாவில் அனு உலை இழப்பீடு மசோதா தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எழுப்பிய எதிர்ப்பு அலைகளின் எதிரொலியாக மசோதா தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவது குறித்த புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 300 கோடி வழங்குவது என்றும், அதற்கு மேல் ஏற்படும் நஷ்டத்தினை மத்திய அரசே வழங்குவது என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இம்மசோதாவை இன்று பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு பா.ஜ., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் மசோதா தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா- அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வர இந்த மசோதா மிக முக்கியமானதாகும். இந்த நிலையில்தான் இந்த மசோதா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று லோக்சபாவில் சபாநாயகர் மீரா குமார் கூறுகையில், சிவில் அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவை தாக்கல் செய்யும் நோக்கம் அரசிடம் இல்லை என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிருத்விராஜ் சவான் எனக்குத் தெரிவித்துள்ளார் என்றார்.

விளக்கம் கோரியது பா.ஜ., : இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஏன் இந்த திடீர் முடிவு. பட்டியலிடப்பட்ட ஒரு விஷயத்தை வாபஸ் பெறுவது என்றால் அதை தீர்மானமாக கொண்டு வந்த பின்னர்தான் வாபஸ் பெற வேண்டும் என்று கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார். இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவரான எல்.கே.அத்வானி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், பட்டியலில் சேர்க்கப்பட்ட மசோதாவை தாக்கல் செய்யாதது ஏன் என்பதை அரசு உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.