சிறிலங்காவுக்கான சீன உதவிகள் மோதல் நிலையையே தோற்றுவிக்கின்றன

சீனா இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் “தங்களால் முடிந்த வழிகளில் எல்லாம் சிறிலங்காவுக்கு உதவ முயற்சிக்கின்றன. ஆனால் நல்ல நோக்கத்துடன் அதனை அவை செய்யவில்லை.

இந்தப் பிராந்தியத்தின் கடல்சார் ஆதிக்க சக்திகளுக்குத் தேவையான புவிசார் நிலையைக் கொண்டிருக்கும் அந்த ‘மரகத’ தேசத்தில் தமது முதலீடுகளின் மூலம் ஞானத் தந்தை [godfathers] ஆகிக்கொண்டிருக்கின்றன இந்த நாடுகள்” என்று கூறுகிறார் அருட்தந்தை எஸ்.நித்தியா.

இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணைக்குழுவின் நிறவேற்றுச் செயலராக [executive secretary of the Justice and Peace Commission of the Catholic Bishops’ Conference of India] இருக்கிறார் அவர்.

சிறிலங்காவில் புதிய அனைத்துலக வானூர்தி நிலையம் ஒன்றில் கட்டங்களை அமைப்பதற்குச் சீனா நிதி உதவிகளை வழங்குகின்றது என்ற செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

சிறிலங்காத் தீவின் தென் பகுதியில் இரண்டாவது அனைத்துலக வானூர்தி நிலையத்தை அமைப்பதற்கு 200 மில்லியன் டொலர் நிதியைச் செலவிட சீனா திட்டமிட்டுள்ளது.
அதற்கு மேலாகத் தீவின் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்காக சீனா 100 மில்லியன் டொலரைச் செலவிட உள்ளது.

சீனா இவ்வாறு சிறிலங்காவில் பணத்தைக் கொட்டிக் குவிப்பது, இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கை என்று சிலர் தெரிவிக்கிறார்கள்.
“இதில் மோசமானது என்னவென்றால்”, அருட்தந்தை கூறுகின்றார்,

“சிறிலங்கா அதிகாரிகளுக்கு நிலைமை என்ன என்பது நன்கு தெரியும். அந்த நிலைமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்கிறார்கள். அவை எல்லாம் அவர்களுக்காகவே செய்யப்படுகின்றன மக்களுக்காக அல்ல.

ஆயுத விற்பனைக்காகவும் தனது தலைமைத்துவ செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே சிறிலங்காவில் சீனா தனது காலடிகளைக் கொண்டுள்ளது. இந்த நிலை, சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான எதிர் நடவடிக்கையை எடுப்பதற்கு இந்தியாவைத் தூண்டுகின்றது.

இந்த விடயங்களை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொண்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும்”

சீனாவைச் சமாளிக்க வேண்டும், அதற்குச் சமமான சக்தியைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா “தனது உள்ளூர் அபிவிருத்திக்குச் செலவு செய்வதைவிடவும் பல பில்லியன்களை ஆயுதத் தயாரிப்புக்களுக்காகச் செலவிடுகிறது.

அதற்கான காரணங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும்கூட, இந்தியா போன்ற பெரிய நாடுகள் ஏன் முரண்பாடுகளைத் தீர்க்க இன்னும் சிறப்பான வழிகளைக் கண்டறிய முடியாது?

ஏன் பேச்சுவார்த்தைகளுக்கு முயலக்கூடாது?

ஏன் அமைதிக்கான முன்முயற்சிகள் எவையும் எடுக்கப்படுவதில்லை?” என்று கேள்விகளை அடுக்குகிறார் அருட்தந்தை.

நித்தியாவினது கருத்துப்படி, சீனா சிறிலங்காவில் காட்டிவரும் அண்மைக் கால ஆர்வம் குறித்த பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்த்துக்கொள்ள முடியும்.
“இந்தப் பிரச்சினை குறித்து ஆராயுமாறு ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் இந்தியா கேட்டுக் கொள்ளலாம். துரதிஷ்டவசமாக இத்தகைய பிரச்சினைகள் குறித்தோ அல்லது பாகிஸ்தானுடனான பிரச்சினை குறித்தோ இந்தியாவுக்கு நேர்மையுடன் நடப்பதில்லை.

சிறிலங்காவில் அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகளை இந்த மூன்று நாடுகளும் தடை செய்துள்ளன. இந்த நாடுகள் எவ்வளவு குற்ற உணர்வுடன் உள்ளன என்பதை அவற்றின் இந்தச் செயலே காட்டுகின்றன.

மக்கள் கொடிய துன்பங்களை எதிர்கொண்டிருக்கையில், இந்த நாடுகள் குறிப்பாகச் சீனா, வெளிநாடுகளில் பணத்தைக் கொண்டு சென்று கொட்டுவது என்பது ஏற்றுக்கொள்ளப்படவே முடியாதது. கடைசியில் அந்தப் பணம் சிலரின் சட்டைப் பைகளையே சென்று சேர்கிறது.

படைமயமாக்கல் ஒரு போதும் அமைதியை ஏற்படுத்தாது. பதிலாக வன்முறைக்கே வழி வகுக்கும். எதிர்கால முதலீடுகள் போர் நலனுக்காக அல்லாமல் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என மேலும் தெரிவித்தார் அருட்தந்தை நித்தியா.

Source & Thanks : puthinappalakai

Leave a Reply

Your email address will not be published.