தமிழ்நாட்டுக்கு ஹிந்தி தேவையில்லை: முதல்வர் கருணாநிதி

posted in: தமிழ்நாடு | 0

தமிழ்​நாட்​டுக்கு ஹிந்தி தேவை​யில்லை என்று முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​தார்.

பு ​திய சட்​டப்​பே​ரவை மற்​றும் தலை​மைச் செய​லக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை விருந்தளித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

இந்த நிகழ்ச்சி கடந்த பல நாள்களாக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றியைப் பாராட்டி மகிழவும்,​​ இந்த வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி சொல்லவும் நடைபெறுகின்ற நிகழ்ச்சி.

பிகார்,​​ பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு,​​ மகிழ்ச்சிப் பெருவெள்ளத்திலே எங்களையும் ஆழ்த்தி,​​ அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள்.

தொழிலாளர்களும்,​​ அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்ததாரர்களும்,​​ உங்களோடு சேர்ந்து அமைதியை உருவாக்கப் பாடுபட்ட காவல்துறையினரும் இன்றைக்கு மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவரவர்களுக்கு தெரிந்த,​​ விரும்புகிற மாநிலத்துப் பாடல்களை இங்கே பாடினார்கள்.

“ஹிந்திப் பாடல்களைப் பாடுகிறார்களே’ என்று பத்திரிகையாளர் ராம் சொன்னார்.​ பாட்டுக்கு ஹிந்தி பரவாயில்லை;​ தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை என்று நான் நினைத்துக் கொண்டேன்.

ஆதிக்கத்தை விரும்பவில்லை:​ மற்ற மாநிலங்களோடு உறவு கொள்கிற,​​ தொடர்பு கொள்கிற கருவியாக மொழி இருந்தால் அதில் தவறில்லை.​ ஒரு மொழிக்காரர்கள்,​​ இன்னொரு மொழிக்காரர்களை ஆதிக்கம் செலுத்துகிற நிலையைத் தான் நாங்கள் விரும்புவதில்லை.

ஆனால்,​​ அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,​​ ஆயிரக்கணக்கான தொழிலாளர்களான நீங்கள் விரும்பிக் கேட்ட ஹிந்திப் பாடல்களை இங்கே பாடியிருக்கிறார்கள்.

அதேபோல், ​​ தமிழ்ப் பாடல்களை பாடும் போது நீங்கள் யாரும் வெறுத்திடவில்லை;​ வரவேற்றீர்கள்.​ இப்படி,​​ ஒருவருக்கு ஒருவர் உறவு செலுத்த வேண்டுமே தவிர,​​ ஆதிக்கம் செலுத்தும் நிலை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை.

இந்த உன்னதமான கட்டடத்தைக் கட்டி முடிக்கக் காரணமான அரசு அலுவலர்களும்,​​ ஒப்பந்தக்காரர்களும்,​​ ​வடிவமைத்தவர்களும்,​​ ​வடிவமைப்புக்கு உரியவாறு பணியாற்றியவர்களும்,​​ குறிப்பாக எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய உங்களுக்கும் அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கட்டடம் எழிலோடு அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் நான் இங்கே வருவதுண்டு.​ அப்படி வரும்போது,​​ இங்குள்ள மேலாளர்களை,​​ செயலாளர்களை நான் தூண்டிவிட்டு,​​ பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு எல்லாம் தொந்தரவு கொடுத்திருக்கிறேன்.​ இதை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை.

இந்த உயர்ந்த கோபுரம் இமயத்தின் வரையில் உள்ளவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.

பொதுப்பணித்துறைச் செயலாளர் ராமசுந்தரம்,​​ பொதுப்பணித் துறை முன்னாள் செயலாளர் ஆதிசேஷய்யா,​​ பொதுப் பணித் துறை தலைமைக் கட்டடப் பொறியாளர் கருணாகரன்,​​ ஒப்பந்த நிறுவனமான இ.சி.சி.ஐ.​ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முஸ்தபா,​​ ​ கட்டடக் கலை நிபுணர் கிறிஸ்டியன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்,​​ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கும்,​​ பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸôருக்கும் மதிய உணவாக “மட்டன்’ பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சென்னை சங்கமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும்,​​ மெல்லிசைப் பாடல்களும் பாடப்பட்டன.

சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன்,​​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,​​ தலைமைச் செயலாளர் கே.எஸ்.​ ஸ்ரீபதி,​​ மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,​​ பொதுப்பணித் துறைச் செயலாளர் எஸ்.ராமசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.