சீனாவின் இறையாண்ûமைக்கு எதிராக செயல்படுகிறது அமெரிக்கா: வென் ஜியாபோ குற்றச்சாட்டு

சீனாவின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீனப்பிரதமர் வென் ஜியா போ குற்றம் சாட்டியுள்ளார்.​ இது குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில் வென் ஜியாபோ கூறியது:

‘சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றுக் கொண்ட பிறகு அமெரிக்க-​ சீன உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.​ ஆனால் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலமும் திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை ஒபாமா வெள்ளை மாளிகையில் சந்தித்ததன் மூலமும் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டுள்ளது.​ தைவானை ஒரு பயங்கரவாத பிரதேசமாக சீனா பார்க்கிறது.​ ஆனால் அமெரிக்காவோ தைவானுக்கு ஆயுதம் விற்பனை செய்கிறது.

அமெரிக்காவின் இந்தச் செயல் இருதரப்பு உறவுகளை பாதித்துள்ளது.​ இதற்கு சீனா எந்த வகையிலும் பொறுப்பல்ல.​ இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஏற்கெனவே இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைகள் தான் அமெரிக்க சீன உறவுகளுக்கான அடித்தளம்.​ அதன்படி அமெரிக்கா செயல்படும் என நம்புகிறேன்.​ இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளின் மூலம் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருவது உண்மை.​ ஆனால் சீனாவை வளர்ந்த நாடு என்று கூற முடியாது.​ இன்னமும் வளரும் நாடாகவே சீனா உள்ளது.​ பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களை மட்டும் பார்த்து சீனாவை வளர்ந்த நாடு என முடிவு செய்து விடக்கூடாது.

சீனாவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமான பொருளாதார இடைவெளி அதிகம் உள்ளது.​ இந்த நூற்றாண்டின் மத்தியில் தான் சீனா வளர்ந்த நாடாக மாறும்.​ அதே சமயம் தற்போது உலகில் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை கையாள்வதிலும்,​​ சர்வதேச ஒத்துழைப்பிலும் சீனா முக்கிய பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது’ என்றார் அவர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.