திருமணம் ஆகாமல் தத்து எடுக்கப்படும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியாது:​ உச்ச நீதிமன்றம்

புது தில்லி,​​ மார்ச் 14: திருமணம் ஆகாத ஒருவர் தத்து எடுத்து வளர்க்கும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க முடியாது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சதீஷ் சாகு.​ இவர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தார்.​ திருமணமாகாத இவர் ஸ்வேதா சாகு என்ற பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.​ பணிக் காலத்தின் ​ போதே சதீஷ் சாகு இறந்து விட்டார்.

இதையடுத்து அவரது வேலையை கருணை அடிப்படையில் தனக்கு வழங்குமாறு ஸ்வேதா சாகு விண்ணப்பம் செய்தார்.​ அதற்கு வங்கி நிர்வாகம்,​​ “திருமணமாகாத ஒருவர்,​​ யாரையாவது தத்து எடுத்திருந்தால் அந்த வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிமுறைகளில் இடம் இல்லை.​ திருமணமாகாத ஒருவர் இறந்தால் அவரது சகோதரன் அல்லது சகோதரியைத் தான் அவரைச் சார்ந்தவராகக் கருதி,​​ கருணை அடிப்படையில் வேலை வழங்க முடியும்.​ அதே சமயம் திருமணம் செய்து கொண்ட ஒருவர் தத்து எடுத்திருந்தால்,​​ தத்து எடுக்கப்பட்ட வாரிசுக்கு வேலை வழங்க முடியும்’ என கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது.

ஸ்டேட் வங்கியின் இந்த முடிவு சட்ட விரோதமானது என கூறி ஸ்வேதா சாகு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.​ மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அவரது மனுவைத் தள்ளுபடி செய்தார்.​ எனினும் பின்னர் மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்,​​ ஸ்வேதா சாகுவின் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டேட் வங்கியின் சார்பில் அதன் வழக்கறிஞர் சஞ்சய் கபூர் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு,​​ ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஸ்டேட் வங்கியின் மனுவை விசாரித்தது.​ “திருமணமாகாத ஒருவர் தத்து எடுத்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க சட்டத்தில் இடமில்லை.​ ஸ்வேதா சாகுவின் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு ஸ்டேட் வங்கிக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது’ என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.