மூன்று குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

posted in: தமிழ்நாடு | 0

ஈரோடு அருகே கணவனை இழந்த பெண் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் ரேவதி (வயது 30). இவரது கணவர் சோமு. இவர்களுக்கு கர்ணன் (4) மற்றும் ராமன், லட்சுமணன் (2 1/2) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர். தறித்தொழிலாளியான சோமு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்ததையொட்டி தனது குழந்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு ரேவதி வளர்த்து வந்தார். தற்போது ரேவதி முள்ளாம்பரப்பு அருகே உள்ள பனைமரத்து தோட்டம் என்ற இடத்தில் தர்மலிங்கம் என்பவரது விவசாய நிலத்தில் தங்கி அந்த நிலத்தில் வேலைபார்த்து வந்தார்.

அவருடன் அவரது மாமியார் நல்லாம்மாள் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேவதி தனது 3 குழந்தைகளுடன் திடீரென மாயமாகி விட்டாள். அவள் எங்கு சென்றாள்? என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது.

ரேவதியின் மாமியாரும் மற்றும் உறவினர்களும் மாயமான ரேவதியையும், குழந்தைகளையும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ரேவதி தங்கி வேலைபார்த்த விவசாய தோட்டத்தின் அருகே செங்கோடக்கவுண்டர் என்பவரது விவசாய கிணற்றில் ரேவதி மற்றும் 3 ஆண் குழந்தைகளின் பிணங்கள் மிதந்தது தெரியவந்தது.

இதுபற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அந்த கிணற்றுக்கு அப்பகுதி மக்கள் பெரும் கூட்டமாக கூடினர். மேலும் சம்பவ இடத்துக்கு ஈரோடு தாலுகா போலீசாரும் விரைந்தனர். அவர்கள் கிணற்றில் மிதந்த தாய் மற்றும் 3 குழந்தைகளின் பிணங்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட 4 பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக கஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிணங்களை பார்த்து உறவினர்களும், கூடி இருந்த பொதுமக்களும் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

ரேவதி தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு பிறகு அவளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

குடும்ப வறுமை காரணமாக குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாளா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஈரோடு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோரும் சென்று பிணங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.