எதிர்க்கட்சிதலைவரான என்னை அவமானப்படுத்திவிட்டனர்: மருத்துவர் இராமதாஸ்

posted in: தமிழ்நாடு | 0

பிரதமர், ஜனாதிபதியை சந்திக்கும் பொழுது செய்த சோதனையைவிட அதிகமாக பென்னாகரம் சென்றபொழுது வாகனத்தை வழிமறித்து எதிர்க்கட்சித்தலைவரான தன்னை சோதனை செய்து அவமானப்படுத்திவிட்டதாக பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. சார்பில் தயாரிக்கப்பட்ட மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியில் சுரண்டல் நடப்பதை தடுக்க தனியார் பள்ளிகளை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும். பல்வேறு அரசியல் தலையீடு மற்றும் முறைகேடு காரணமாக மின்சாரத்துறை மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இதை சீரமைக்க ஒரு வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும்.

மக்கள் ஒவ்வொரு வரும் ஜனாதிபதி போல சிறந்த மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றால் சிக்கிம் மாநிலத்தை போல உத்தேச சுகாதார பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

உள்ளாட்சி “மகளிர் நலம் உள்பட பல்வேறு துறைகளும் சிறப்பாக செயல்பட ஏராள மான ஆலோசனைகளை இந்த மாதிரி பட்ஜெட்டில் கூறி இருக்கிறோம்.

தற்போது விவசாயத்துறை மோசமான நிலையை சந்தித்து வருகிறது. அதை சீரமைக்க வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். இதை பல முறை நாங்கள் சொல்லி இருக்கிறோம். இதுபற்றிய ஆலோசனையும் மாதிரி பட்ஜெட்டில் கூறி இருக்கிறோம்.

ஒரு பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்றால் பொது மக்கள், வியாபாரிகள், நிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பு கருத்துக்களை கேட்டு தயாரிக்க வேண்டும் அது போல நல்ல கருத்துக்களை கூறி இருக்கிறோம்.

பென்னாகரம் தேர்தலில் ஆளுங்கட்சி பல்வேறு தவறுகளை செய்து வருகிறது. இலவச பொருட்கள், பணம் போன்றவை வினியோகம் செய்யப்படுகிறது. இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

நான் பிரசாரம் செய்ய சென்ற போது எனது வாகனத்தை வழி மறித்து சோதனை செய்தார்கள். ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள மரியாதையை இந்த அரசு எனக்கு வழங்கவில்லை. என்னை அவமானப்படுத்தி விட்டனர்.

நான் பிரதமரை சந்தித்து இருக்கிறேன், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து இருக்கிறேன், வாஜ்பாயை சந்தித்து இருக்கிறேன். அப்போது கூட இப்படி சோதனை நடந்தது இல்லை.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.