நேரு குடும்பத்திலேயே முதல் முறையாக சத்தியமூர்த்தி பவன் செல்லும் சோனியா

posted in: தமிழ்நாடு | 0

சென்னை: இதுவரை நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாருமே, சென்னையில் உள்ள காங்கிரஸ் [^] தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை. அந்தப் பெருமையை முதல் முறையாக உடைத்து அங்கு விசிட் அடிக்கவுள்ளார் சோனியா காந்தி.

தீரர் சத்தியமூர்த்தியின் பெயரால் சென்னை அண்ணா சாலைக்கு அருகே அமைந்துள்ளது சத்தியமூர்த்தி பவன் என்று அழைக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகம்.

இந்த அலுவலகத்திற்கு ஒரு பெருமை உள்ளது. அதாவது நேரு குடும்பத்தைச் சேர்ந்த எந்த தலைவருமே இங்கு வந்ததில்லை என்பதுதான் அந்தப் பாரம்பரியப் பெருமை.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இருந்தபோது ஒரு முறை கூட இங்கு வந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் பலமுறை சென்னைக்கும், தமிழகத்திற்கும் வந்துள்ளனர். ஆனால் ஒரு முறை கூட தங்களது கட்சியின் மாநிலத் தலைமையகத்திற்குப் போனதில்லை.

பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னரும் கூட அவரும் பலமுறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

இதை விடக் கொடுமை,சத்தியமூர்த்தி பவன், 1956ம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்று முதல், கட்சியின் அகில இந்தியத் தலைவராக பொறுப்பு வகித்த யாருமே இங்கு வந்ததே இல்லை என்பதுதான் அது.

எத்தனையோ கோஷ்டிப் பூசல்களையும், அடிதடியையும், அரிவாள் வெட்டையும் கூட சந்தித்துள்ளது சத்தியமூர்த்தி பவன். ஆனால், ஒரு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கூட இந்த கட்டட வளாகத்திற்குள் எட்டிப் பார்த்ததில்லை.

காங்கிரஸ் தலைவர்கள் என்றில்லை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த முக்கியத் தலைவரும் இந்தப் பக்கம் கூட பெரும்பாலும் எட்டிப் பார்த்ததில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் சரி, பிற மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் சரி, காங்கிரஸ் தலைவர்களும் சரி யாருமே இங்கு வருவதில்லை.

எப்போதாவது யாராவது ஒருவர் வந்து எட்டிப் பார்த்து தலையைக் காட்டிச் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு சத்தியமூர்த்தி பவனை காங்கிரஸ் கட்சியினர் மதித்துப் போற்றி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கென்று தனி இணையதளம் ஒன்று உள்ளது. அதில் கூட சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் புகைப்படம் கிடையாது. தங்கபாலு மற்றும் சுதர்சனம் படம் மட்டும் பளிச்சென இடம் பெற்றுள்ளது. கட்சித் தலைமை அலுவலகத்தின் படத்தை பளிச்சென மறந்து விட்டனர்.

இந்த அவல நிலையை சமீபத்தில் சென்னைக்கு ராகுல் காந்தி வந்தபோது லேசாக துடைத்தார். சென்னைக்கு வந்த அவர் நேராக சத்தியமூர்த்தி பவனுக்குத்தான் போனார். அங்கு அமர்ந்து காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது சத்தியமூர்த்தி பவனை ஒரு கட்சித் தலைமையகமாக மதித்தவர் அவர் மட்டுமே.

அத்தோடு நில்லாமல், கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கட்டாயம் வர வேண்டும் என்றும் குட்டு குட்டினார் ராகுல். அவர் சொன்ன பிறகே மூத்த தலைவர்கள் சிலர் அவ்வப்போது இங்கு வந்து உட்கார்ந்து விட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க சோனியா வருகிறார். இந்த பயணத்தின்போது சத்தியமூர்த்தி பவனுக்கும் அவர் செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற விழாவை முடித்துக் கொண்டு சோனியா காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சித் தலைமையகத்திற்கு வருகிறார் என்ற செய்தி காங்கிரஸாரிடையே ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆச்சரியத்தோடு சோனியாவை வரவேற்க அவர்கள் தயாராகி வருகின்றனர்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.