விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள்

posted in: வர்த்தகம் | 0

சென்னை : கிராமப்புற மக்களின் பயன்பாட்டிற் காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில், சூரிய சக்தியில் இயங்கும் ஏ.டி.எம்.,கள் நிறுவப்பட உள்ளன.இது குறித்து, சோலார் ஏ.டி.எம்.,கள் தயாரிக்கும், ‘வொர்டெக்ஸ்’ இன்ஜினியரிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி விஜய்பாபு, சி.டி.ஓ., கண்ணன், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கிராம மக்களின் தேவைக்காக, சோலார் ஏ.டி.எம்.,களை (சூரிய சக்தியில் இயங்கும் தானியிங்கி பணம் வழங்கி) பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பின், ‘வொர்டெக்ஸ்’ நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஏ.டி.எம்., குறைந்த மின் சக்தியில் இயங்கும். இதற்கு குளிர்சாதன வசதி தேவையில்லை. இந்த கருவியில், பழைய நோட்டுகளையும் வைக்கலாம்.கடலூர் மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க இத்தகைய ஏ.டி.எம்.,கள் நல்ல முறையில் பயன்பட்டன. இதை இயக்குவது மிக எளிது. அதனால், படிப்பறிவு இல்லாதவர்களும், எளிதில் பணம் எடுக்கலாம். இதில், கை ரேகை பதிவு வசதியும் உள்ளது.இந்தக் கருவி, குறைவான கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதால், சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. மற்ற ஏ.டி.எம்.,களைப் போலவே, எந்த வங்கி கணக்கில் இருந்தும் இதில் பணம் எடுக்க முடியும்.மின் வெட்டு, மழையிலும் ஏ.டி.எம்., செயல்படும். ஆண்டு முழுதும் இயங்கக் கூடிய வகையில் சோலார் ஏ.டி.எம்., தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதியில் தான் தற்போது ஏ.டி.எம்.,களின் தேவை அதிகம். நம் மக்கள் தொகையின் படி, இன்னும் நாடு முழுவதும் 60 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் தேவை. இதைப் பூர்த்தி செய்ய சூரிய சக்தி ஏ.டி.எம்.,கள் சிறந்தவை. இதை நன்கு உணர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, ‘வொர்டெக்ஸ்’ நிறுவனத்திடம் 545 ஏ.டி.எம்.,களை வாங்குகிறது. இதில், 33 ஏ.டி.எம்.,கள் சூரிய சக்தியில் இயங்குபவை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.