ராஜீவ் காந்தி கனவை நனவாக்கியுள்ளோம்: சோனியாகாந்தி

மகளிர் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியிருப்பதன் மூலம் ராஜீவ் காந்தியின் கனவை நனவாக்கியுள்ளோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்து டெல்லியில் கட்சி நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி பேசியதாவது:

ஏழைகள், சமுதாயத்தின் அடித்தள மக்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது. அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும். இதற்கான முயற்சி ராஜீவ் காந்தி ஆட்சியில் தொடங்கப்பட்டது. நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 14 ஆண்டு போராட்டத்துக்குப் பின் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளோம். இதன் மூலம் ராஜீவ் காந்தியின் கனவை நனவாக்கியுள்ளோம்.

வெளிப்படையான அரசு நிர்வாகம் அமைய தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர். எல்லாக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டதன் மூலம் தரமான ஆரம்பக் கல்வி கிடைக்க வகை செய்தோம். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சாதனைகளையும் 125 ஆண்டு விழாவின் போது மக்களிடம் காங்கிரஸ் கட்சியினரும் தொண்டர்களும் விளக்க வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
இதனிடையே, காங்கிரஸ் மக்களவை செயலாளர்களாக சுரேஷ் கல்மாடி, கே.சுரேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர்களாக கிரிஜா வியாஸ் உட்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.