கொச்சி துறைமுகத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ- தொய்பா இயக்கம் சதி திட்டம் தீட்டியுள்ளது.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் இணைந்து இந்த நாசவேலையை செய்ய லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் தீவிரமாகி உள்ளனர்.

பெங்களூர், மும்பை, டெல்லி நகரங்களையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் குறி வைத்து இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தேசிய புலனாய்வுக் குழு, அமெரிக்காவில் பிடிபட்ட ஹெட்லி, ராணாவிடம் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டியது.

அப்போது லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் கேரளாவில் உள்ள கொச்சி நகருக்கு தங்கள் வெறிப்பார்வையைத் திருப்பி இருப்பது தெரிய வந்தது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நேற்று காலை சில தகவல்களை போனில் பரிமாறிக் கொண்டதை உளவுத்துறை ஒட்டுக்கேட்டது. அப்போது கொச்சி பற்றி அவர்கள் பேசினார்கள். இதன் மூலம் கொச்சிக்கு உள்ள ஆபத்து உறுதியானது.

கொச்சி நகரில்தான் இந்திய கடற்படையின் முக்கிய தளம் உள்ளது. அதோடு தொழில் வளர்ச்சி பெற்றுள்ள இந்த நகருக்கு சமீபகாலமாக வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். எனவே கொச்சியில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி அதிக இழப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறையும் எச்சரித்துள்ளது.

கொஞ்சி நகரைத் தகர்க்க தீவிரவாதிகள் ரகசிய திட்டம் தீட்டி இருக்கும் தகவலை கேரள அரசுக்கு மத்திய உள்துறை நேற்று தெரிவித்து உஷார்படுத்தியது. இதையடுத்து கொச்சியில் நேற்று உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கொச்சி நகருக்குள் வரும் அனைத்து சாலைகளும் “சீல்” வைக்கப்பட்டன.

விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிப்பு நடந்து வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜூகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

கொஞ்சி துறைமுகத்துக்குத்தான் தீவிரவாதிகள் குறி வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கொச்சி துறைமுக பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொச்சி நகரின் உச்சக்கட்ட பாதுகாப்பு சுமார் ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொச்சி நகருக்கு தீவிரவாதிகளால் எத்தகைய ஆபத்து ஏற்படலாம் என்ற தகவலை அரசு வெளியிடவில்லை.

கொச்சியின் முக்கிய பகுதியாக விளங்கும், மட்டாஞ்சேரி, தோப்புபடி போன்ற இடங்களில் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டாஞ்சேரியில் உள்ள பிரபல யூதா கிறிஸ்தவ தேவலாயத்தில் போலீசார் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கபடுகின்றனர்.

மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து கமாண்டோ போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரெயில் நிலையம் துறைமுகம், விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் ஆபத்து இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து கொச்சி நகரம் முழுவதும் கடந்த 4 நாட்களாக போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Source & Thanks : maalaimalar.

Leave a Reply

Your email address will not be published.