அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே மக்களவையில் மகளிர் மசோதா: பிரணாப் முகர்ஜி

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் செய்த அமளியால் மக்களவையில் நேற்றும் 4வது நாளாக அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்த பிறகே மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.


நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவை மக்களவையிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு இந்த இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்யாமல் மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது என்று முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், சரத் யாதவின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. மக்களவையில் இந்த பிரச்னையை கிளப்பி அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்றும் 4வது நாளாக இது நீடித்தது.

நேற்று காலை அவை கூடியதும் இந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த மசோதாவை பற்றிய தங்கள் கருத்துகளை கூறும்படி முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் சரத் யாதவ் ஆகியோருக்கு சபாநாயகர் மீரா குமார் அழைப்பு விடுத்தார். மகளிர் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்யும்படியும், இந்த பிரச்னை பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அவை முன்னவர் பிரணாப் முகர்ஜி, “அவையில் மசோதா தாக்கல் செய்யப்படும் முன்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதிலும் தயக்கம் இல்லை. ஒரு அவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, மற்றொரு அவையில் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அரசியல் சட்டத் திருத்த மசோதாவான இது, நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அங்கீகரிக்க வேண்டும். எனவே, அவை நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவதால் ஒரு பலனும் ஏற்படாது” என்றார்.

பிரணாப் முகர்ஜியின் இந்த பதிலால் திருப்தி அடையாத லாலு, முலாயம், சரத் யாதவ் கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லாலு, முலாயம் மற்றும் சரத் யாதவை பிரணாப் முகர்ஜி தனது அறைக்கு அழைத்துப் பேசினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மக்களவையில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த அறிக்கையில், ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யும் முன்பாக, அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டும் என்ற பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி, மசோதா தாக்கல் செய்யப்படும் முன்பாக அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும். அரசின் இந்த உத்தரவாதத்தால் அவை நடவடிக்கை சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறோம்’ என்று கூறினார். அரசின் இந்த உறுதிமொழி, லாலு, முலாயம் சிங், சரத் யாதவுக்கு திருப்தி அளித்ததால் அமைதியாகினர். இதையடுத்து மக்களவை அமைதியாக நடந்தது.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.