பென்னாகரத்தில் வேட்டி, சேலை, அரிசி ஏற்றிச் சென்ற லாரிகள் சுற்றிவளைப்பு

posted in: தமிழ்நாடு | 0

பென்னாகரம்: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பென்னாகரத்தில் வேட்டி, சேலை மற்றும் அரிசி மூட்டைகளுடன் வந்த 2 லாரிகளை பாமகவினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சியினர் மும்முரமாக பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகள் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்குவதாக புகார் [^] கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பென்னாகரத்தில் ஒகேனக்கல் பிரிவு சாலையில் 2 லாரிகள் சென்றன. அந்த லாரிகளை பாமகவினர் திடீரென்று வழிமறித்து நிறுத்தினர்.

கூட்டத்தினரை கண்டதும், டிரைவர்கள் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்கள். அப்போது பாமகவினர், ‘வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 2 லாரிகளிலும் வேட்டி-சேலைகள் கொண்டு செல்லப்படுகிறது’ எனக் கூறி கோஷமிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து உதவிகலெக்டர் முன்னிலையில் லாரி சோதனையிடப்பட்டது.

அப்போது 2 லாரிகளிலும் அரிசி மூட்டைகள் மற்றும் அட்டை பெட்டிகளில் வேட்டி-சேலைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனே பாமகவினர் ஓரமாக நின்று கொண்டிருந்த 2 லாரி டிரைவர்களையும் பிடிக்க முயன்றனர். ஆனால் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

உடனே பாமகவினர் லாரிகளின் சக்கரத்தில் இருந்த காற்றை பிடுங்கி விட்டனர். லாரிகளை சுற்றி அமர்ந்துகொண்டனர்.

கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் இங்கு வந்து விசாரணை நடத்த வேண்டும், வேட்டி-சேலைகளை கொண்டு வந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

பின்னர் தேர்தல் பார்வையாளர் உத்தரவுப்படி 2 லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொகுதியில் 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் இருந்தும் போலீஸ் பாதுகாப்புடன் ஆளுங்கட்சியினர் இவ்வாறு பொருட்களை கொண்டுச் செல்வதாக பாமக எம்எல்ஏ தமிழரசு புகார் கூறினார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.