நாளை பிரமாண்டமான விழா

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.450 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை, தலைமை செயலக வளாகத்தின் திறப்புவிழா நாளை நடக்கிறது.

இந்த பிரமாண்டமான விழாவில் கலந்துகொண்டு, புதிய கட்டிடத்தை பிரதமர் மன்மோகன் சிங் நாளை திறந்து வைக்கிறார். சோனியா காந்தி, கவர்னர் பர்னாலா முன்னிலையில் நடக்கும் விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
தமிழக சட்டப் பேரவை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. கோட்டையில் இட நெருக்கடி காரணமாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகளை முதல்வர் கருணாநிதி கடந்த 2008 நவம்பர் மாதம் 12ம் தேதி தொடங்கி வைத்தார். இதன்படி சென்னையில் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 198.44 அடி உயரத்தில் 9 லட்சம் சதுர அடி பரப்பில் தரைத் தளம் நீங்கலாக 7 மாடிகள் கொண்ட பிரமாண்டமான கட்டிடம் பல்வேறு அதி நவீன வசதிகளுடன் ரூ.450 கோடியில் ஜெர்மன் நிபுணர்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த கட்டிட உச்சியில் 800 டன் எடையில் ரூ.20 கோடி செலவில் திராவிட கலாசாரத்தை குறிக்கும் மிகப் பெரிய கோபுரம் அமைக்கப்படுகிறது. வளாகத்தின் பணிகள் பெருமளவு முடிந்து விட்டது. கட்டுமான பணி தொடங்கப்பட்ட நாள் முதல் திறப்பு விழா நடக்கும் வரையில் சுமார் 100 முறைக்கு மேல் முதல்வர் கருணாநிதி நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தும், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். கடந்த ஒரு வாரமாக தினமும் இரண்டு முறை சென்று பார்வையிட்ட முதல்வர், நள்ளிரவு 12 மணிக்கு மேலும் அங்கு சென்று பார்வையிட்டார். இதன் திறப்பு விழா, அரசினர் தோட்டத்தில் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக, புதிய கட்டிடம் வடிவில் பிரமாண்டமான மேடையும் 5000 பேர் உட்கார வசதியாக பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டப் பேரவை, தலைமை செயலக வளாக திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா முன்னிலை வகிக்கிறார்கள் இந்த பிரமாண்டமான விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தமிழக சட்டப் பேரவை தலைவர் ஆவுடையப்பன், தலைமை செயலர் ஸ்ரீபதி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
வருகிற 19ம் தேதி புதிய சட்டப் பேரவையில் 2010& 2011ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து கூட்டத் தொடர் முடிவடைந்ததும் வளாகத்தின் மற்ற பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை செயலகத்தின் பி பிளாக் கட்டும் பணி தொடங்குகிறது.
தமிழக சட்டப் பேரவை கூட்டம் முதன் முதலில் 1921 முதல் 1937 வரை கோட்டையிலும் பிறகு 14&7&1937 முதல் 21&12&1939 வரை சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்திலும் நடந்தது. 27&1&1938 முதல் 26&10&1939 வரை ராஜாஜி மண்பத்திலும் 24&5&1946 முதல் 27&3&1952 வரை கோட்டையிலும் 3&5&1952 முதல் 27&12&1956 வரை கலைவாணர் அரங்கிலும் 29&4&1957 முதல் 30&3&1959 வரை கோட்டையிலும் பின்னர் 20&4&1959 முதல் 30&4&1959 வரை ஊட்டியிலும் நடந்தது. 31&8&1959 முதல் இதுவரை கோட்டையில் பேரவை கூட்டம் நடந்து வந்தது. இனி புதிய கட்டிடத்தில் நடைபெறும்.

Source & Thanks : dinakaran.

Leave a Reply

Your email address will not be published.