அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி

posted in: தமிழ்நாடு | 0

கோவை : தேர்வு காலத்தில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை மீது பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அரசே கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஏ, பி, சி, டி என நான்கு வகையாக பிரித்து, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, வழங்கப்படும் சம்பளம், மாணவர் எண்ணிக்கை, வகுப்பறை எண்ணிக்கை, கழிப்பறை எண்ணிக்கை, விளையாட்டு மைதான வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்த கேள்விகள் அடங்கிய படிவம், இரு மாதங்களுக்கு முன் அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் தரப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களின் விபரங்களை சரிபார்க்க தனிக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. இதன் அறிக்கை, பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், கட்டண நிர்ணயம் தொடர்பான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே, பள்ளிகள் வழக்கம் போல் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை துவங்கின. இதற்கு தடை விதிக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மே 13 வரை நடத்தக் கூடாது, என உத்தரவிடப்பட்டது. பின்னர், பள்ளி நிர்வாகங்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது கட்டணம் பெறாமல் மாணவர் சேர்க்கை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த உத்தரவை மீறி பல பள்ளிகள் வழக்கம் போல் கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் சில கேள்விகளுடன் கூடிய படிவம் அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் மின்சார கட்டண ரசீது, தண்ணீர் வரி, போன் பில், இன்டர்நெட் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, ஒவ்வொரு ஆண்டும் ஆய்வகம், நூலகங்களுக்கு செலவிடப்படும் தொகை, தபால் செலவு, வருமான வரி விலக்கு பெறுவதற்கான உத்தரவின் நகல், ஆகியவற்றின் ரசீதையும் இணைத்து, சான்றொப்பம் பெற்று, சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நர்சரி, நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் மூலமும், மெட்ரிக் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் வாயிலாகவும் கடந்த 8ம் தேதி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பூர்த்தி செய்த படிவங்களை மறுநாளே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மிக குறுகிய நாள் இடைவெளியில் மீண்டும், மீண்டும் இவ்வாறு விபரங்கள் கேட்டு நெருக்கடி ஏற்படுத்தும் பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கை, பள்ளி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: ஏற்கனவே பல முறை, பள்ளி வசதிகள் குறித்த விபரங்களை புகைப்படங்களுடன் சமர்ப்பித்துள்ளோம். தற்போது 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான “பில்’ விபரங்களை கேட்டு நிர்பந்திக்கின்றனர். கடந்த 8ம் தேதி படிவத்தை கொடுத்துவிட்டு, “பில்’ ஒவ்வொன்றிலும் நான்கு சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களாக மறுநாளே பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும், என நெருக்கடி கொடுத்தனர்.

பள்ளி அங்கீகாரம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் என பிரித்து, மீண்டும் மீண்டும் கேட்டு நெருக்கடி தருகின்றனர். தேர்வு காலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த பயிற்சி அளித்து வரும் பள்ளி நிர்வாகிகளுக்கு, அரசின் இந்நடவடிக்கை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இனி, அடுத்தமுறை என்ன விபரம் கேட்டு கடிதம் வருமோ, என்ற குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு, கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.