சிலியில் புதிய அதிபர் பதவியேற்பின்போது பயங்கர நிலநடுக்கம்- சுனாமி பீதி

சான்டியாகோ: சிலியில் புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா பதவியேற்ற சில நிமிடங்களில் அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பீதி ஏற்பட்டது.

சமீபத்தில்தான் சிலியை கடும் நிலநடுக்கம் புரட்டிப் போட்டது. இதில் கன்செப்சியான் நகர் சீர்குலைந்து போனது. 8.8 ரிக்டர் அளவில் இருந்த இந்த நிலநடுக்கத்தால் தென் அமெரிக்க நகரங்கள் பலவும் நகர்ந்து போய் விட்டதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் அங்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய அதிபராக செபாஸ்டியன் பினெரா பதவியேற்ற சில நிமிடங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூகம்பத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் உடனடியாக அனுப்பப்பட்டது. புதிய அதிபர் பினெராவும் அங்கு விரைந்து சென்றார்.

இதுகுறித்து பினெரா கூறுகையில், உடனடியாக படையினர் விரைந்து செல்கிறார்கள். தேவையான நிவாரண மற்றும் மீட்புப் படையினரும் அனுப்பப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றார்.

இந்த நிலநடுக்கத்தின் அளவு 7 ரிக்டராக இருந்ததாக ஒரு தகவலும், 6.9 என்று இன்னொரு தகவலும் கூறுகிறது.

நிலநடுக்கம் காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டடம் அதிர்ந்தது. டிவி ஒளிபரப்பு விளக்கு ஸ்டேண்டுகள் அசைந்தன.

உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி பீதியும் ஏற்பட்டுள்ளது.

பூகம்பத்தின் மையம் ரன்காகுவா என் இடத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு தற்போது பினெரா விரைந்துள்ளார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.