12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் கேள்வியில் குழப்பம்

posted in: தமிழ்நாடு | 0

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல் கேள்வித்தாள்களில் எழுத்துப்பிழைகளால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டுமென்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கியது. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் 6 பாடங்களுக்கான தேர்வுகளில் இயற்பியல் தேர்வு கடந்த 8ம் தேதி நடந்தது.

இந்த தேர்வில் தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளின், 31வது கேள்வியில் அச்சுப் பிழை ஏற்பட்டுள்ளது. ‘கூலும் விதி’ என்பதற்கு பதில், ‘கூவும் விதி’ என்று இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த கேள்வியின் அர்த்தமே மாறுகிறது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆங்கில வழியில் வழங்கப்பட்ட கேள்வித் தாளில் சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால் 31வது கேள்விக்கு உரிய 3 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்கின்றனர்.

ஆங்கில வழிக் கேள்வித் தாளில் இடம் பெற்றுள்ள முதல் கேள்வியில், நான்கு விடைகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் பி மற்றும் சி என்ற விடைகள் இயற்பியல், வேதியியல் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ளன. அந்த கேள்விக்கு எந்த பதிலை எழுதுவது என்று மாணவர்கள் குழம்பி உள்ளனர். 5வது கேள்வி தொடர்பான விஷயங்கள் பாடப் புத்தகத்தில் உள்ளது.

ஆனால் அந்த பகுதி தேர்வில் இடம் பெறாது என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். அதேபோல் 14வது கேள்வி, கான்செப்ட் புக்கில் தெளிவாக இல்லை. விளக்கம் கொடுக்கவில்லை. அதற்கான விடை கேள்வித்தாளில் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இரண்டு விடைகளில் எது சரி என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 54வது கேள்வி பாடத்தில் இருந்து எடுக்காமல் வெளியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நேற்று நடந்த வேதியியல் தேர்வு கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் ‘செட் பி’ 3வது கேள்விக்கு கொடுக்கப்பட்ட 4 விடைகளும் தவறு.

70வது கேள்வியில் 4வது வரியில் பார்முலா தவறாக இருந்தது. எனவே மேற்கண்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்குவது தொடர்பாக தேர்வுத் துறை பரிசீலிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source & Thanks : newindianews.

Leave a Reply

Your email address will not be published.