நளினி வழக்கில் அறிக்கை தாக்கல்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் விடுதலை குறித்து, ஆலோசனை குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆலோசனை குழு அறிக்கை மீதான முடிவை 29ம் தேதி அறிவிப்பதாக தமிழக அரசு பதிலளித்துள்ளது. அரசு பதிலை ஏற்று வழக்கு விசாரணையை வருகிற 29ம் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட் உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் நளினி உள்ளார். 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன் கூட்டி விடுதலை செய்ய அரசிடம் நளினி கோரினார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். முன் கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி, நளினி விடுதலை தொடர்பாக விசாரணையும் நடத்தியது. நளினி மற்றும் சாமி தாக்கல் செய்த மனுக்கள் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரும் போதெல்லாம், ஆலோசனைக் குழுவின் அறிக்கை இன்னும் அரசுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால், இந்த வழக்கு விசாரணை அவ்வப்போது தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் தேசிங்கு, “இப்போது தான் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு வந்துள்ளது. பதிலளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதி தர்மாராவ், “ஏற்கனவே பல முறை வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அட்வகேட் ஜெனரல் எங்கே?’ என கேட்டார். வேறொரு நிகழ்ச்சியில் அவர் இருப்பதாக அரசு வக்கீல் கூறியதைத் தொடர்ந்து, ஆலோசனைக் குழுவின் அறிக்கையை நாளை (இன்று) தாக்கல் செய்யுமாறு கூறி, விசாரணையை “டிவிஷன் பெஞ்ச்’ தள்ளிவைத்தது. சிறிது நேரத்துக்குப் பின், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கோர்ட்டுக்கு வந்தார். “ஆலோசனை குழு அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதை நீதிபதிகள் மட்டும் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை அரசின் பரிசீலனையில் உள்ளது’ என அட்வகேட் ஜெனரல் கூறினார்.

இதையடுத்து, இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2 வாரங்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 29ம் தேதிக்கு கோர்ட் தள்ளிவைத்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.