நாடாளுமன்றத்தை தவிர்த்துவிட்டு முஸ்லிம் லீக் மாநாட்டில் ஆஜரான அழகிரி

posted in: தமிழ்நாடு | 0

நெல்லை: மகளிர் மசோதா நிறைவேற வேண்டிய நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை தவிர்த்துவிட்டு, முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் வந்தேன் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசினார்.

இந்திய முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நேற்று நடந்தது.

மாநாட்டில் மத்திய உரத்துறை அமைச்சரும், திமுக தென்மண்டல் அமைப்பாளருமான மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசுகையில்,

‘இந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என என்னை டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் 185 ஓட்டுகளில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே நான் மாநாட்டிற்கு வருவதற்காக விமான நிலையத்துக்கு புறப்பட்டேன். நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

எனவே நீங்கள் டெல்லியிலேயே இருக்க வேண்டும் என சகோதரி கனிமொழி என்னை போனில் தொடர்பு கொண்டு கூறினார். நான் மாநாடுக்கு வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டேன். என் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகக் கூடாது என கூறிவிட்டு வந்து விட்டேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த சமுதாயம் பாடுபட்டு வருகிறது. திமுக கடந்த 67ம் ஆண்டு தேசிய லீக்குடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது.

காயிதே மில்லத் பேரன் அப்துல் ரகூப் என் தம்பி துணை முதல்வர் ஸ்டாலினுடன் படித்தவர். 77ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டபோது அமைந்தகரையில் தேர்தல் காரியலாயம் அமைத்து பணியாற்றினோம்.

அப்போது காயிதே மில்லத் பேரனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பதவியை பற்றி கவலையில்லை. மக்கள் என்மீது வைத்துள்ள அன்பு தான் பெரியது.

இஸ்லாமிய சமுதாய மக்கள் என் மீதும், தலைவர் மீதும் வைத்துள்ள அன்பு 100 வயது வரை முதல்வரை பதவியில தொடர செய்யும்.

கடந்த 1947ம் ஆண்டு முதல் 1962 வரை அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் பதவியில் இல்லை. முஸ்லிம் அமைச்சர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அண்ணாதுரை குரல் கொடுத்தார்.

இதனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த கடையநல்லூர் மஜித் அமைச்சரானார். தொடர்ந்து இன்று வரை பல இஸ்லாமியர்கள் எம்எல்ஏ, எம்பி, மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் பல்வேறு பதவிகளை அளித்து திமுக கவுரவித்தது என்றார்.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.