பயங்கரவாதிகளுக்கு உதவி பலரை கொல்ல சதி புரிந்த அமெரிக்க பெண் லா ரோஸ் கைது

நியூயார்க்:ஐரோப்பா, தெற்காசியா நாடுகளில் உள்ள பலரை கொல்வதற்கு, பயங்கர வாதிகளுக்கு உதவி வந்ததாக அமெரிக்க பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கொலீன் லா ரோஸ்(46).

இவருக்கு பாத்திமா லா ரோஸ் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர், இன்டர்நெட் மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அல்லாவுக்காக ஜிகாத் பணி மேற்கொண்டு தியாகியாக விரும்புகிறேன் என, அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பயங்கரவாத அமைப்பினர் இவரை தொடர்பு கொண்டு, சில வேலைகளைச் செய்ய உத்தரவிட்டனர். லா ரோஸ் அமெரிக்க பெண்மணி என்பதால் அவருடைய தோற்றம், நிறம் ஆகியவை பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. சுவீடன் நாட்டில் உள்ள ஒருவரை கொல்வதற்கு, லா ரோசுக்கு பயங்கரவாத அமைப்பினர் உத்தரவிட்டனர். இதை அவர் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகள் பலர் அமெரிக்காவுக்குள் ஊடுருவுவதற்கு, மற்றொரு நபரின் பாஸ்போர்ட்டை திருடிக் கொடுத்துள்ளார். இன்னும் சில பயங்கரவாதிகள் லா ரோசை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் குடியேறி நாசவேலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுகள் லா ரோஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், டேவிட் கோல்மேன் ஹெட்லி கைது செய்யப்பட்ட மறுநாள் லா ரோசும் கைது செய்யப்பட்டார். அரசு தரப்பு வக்கீல், மேற்கண்ட குற்றச் சாட்டை கோர்ட்டில் நேற்று பதிவு செய்தார். இந்த குற்றச்சாட்டை லா ரோஸ் ஒப்புக் கொண்டார்.இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் லா ரோசுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அமெரிக்க சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.