விடுதலைப் புலிகளுக்கு வல்லரசுகள் ஆதரவு

கொழும்பு, மார்ச் 10: இலங்கையில் அமைதி திரும்புவதையும் வளர்ச்சி பெறுவதையும் விரும்பாத சில வல்லரசுகள், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின்போது பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலைப் பிரகடனத்தை மேலும் நீட்டிப்பதற்கான சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நெருக்கடி நிலைப் பிரகடனத்தை மேலும் நீட்டிப்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை என்பதால் இப்படியொரு குற்றச்சாட்டை அவர் கூறினாரா என்று தெரியவில்லை. இந்த நீட்டிப்பை ஜனதா விமுக்தி பெரமுன கட்சியும் தமிழர் தேசிய விடுதலை கூட்டணியும் மட்டுமே எதிர்த்தன. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுவிட்டது.

பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக பேசியதாவது:

“வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆசிய நாடுகளில் வலுவான நாடாக இலங்கை வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நம் நாட்டில் உள்ள சில உள்ளூர் சக்திகளுடன் இணைந்து நமக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை வலுப்படுத்த முயன்ற சிலர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டில் தங்கி விடுதலைப் புலிகளுக்காக வேலை செய்யும் ஒருவரை சமீபத்தில் கொழும்பின் புறநகரான தெஹிவளையில் நம்முடைய போலீஸôர் கைது செய்தனர்.

தேச விரோத சக்திகள் கூறும் புகார்களுக்கு ஆதாரங்களாக புனைகதைகளைச் சேர்க்கும் பணியில் சில உள்நாட்டு அமைப்புகளே ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது.

நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுவதால் அரசுக்குக் கிடைக்கும் அதிகாரம் எப்போதுமே தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களுடைய கருத்துரிமைகள் காக்கப்பட்டன, தொழிற்சங்கங்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டன.

ஆனால் சில சக்திகளோ இலங்கை அரசு அடிப்படை உரிமைகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன.

நாட்டுக்கும் அரசுக்கும் எதிராக சில சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து உளவுப்பிரிவு போலீஸôர் மூலம் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற, பயங்கரவாத சக்திகளை நாம் முறியடித்தோம். வெகு விரைவிலேயே அவர்கள் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகளைப் பெறுவார்கள். அவர்கள் இந்த உரிமைகளைப் பெற முடியாதபடி மற்ற எந்த சக்தியும் தடுத்துவிடாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளாகவே வளர்ச்சிப் பணிகள் இன்றி நாடு பின்தங்கிவிட்டதால் இப்போது மிக வேகமாக முன்னேறியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஆசியாவிலேயே வலுவான நாடாக நாம் உருவாவதை சகித்துக்கொள்ள முடியாத நாடுகளும் பிரிவுகளும் இருக்கின்றன.

அப்பாவியான நம்முடைய மக்களின் உணர்வுகளை மாற்றி, தங்களுக்குச் சாதகமாகச் செயல்படவைக்கும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது’ என்றார் விக்ரமநாயக.

பிறகு, நெருக்கடி நிலையை மேலும் நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பதிவாயின.

Source & Thanks : dinamani

Leave a Reply

Your email address will not be published.