பென்னாகரம் தொகுதியில் மோதல்: நரேஷ்குப்தாவிடம் பா.ம.க. புகார் மனு “அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

posted in: தமிழ்நாடு | 0

பென்னாகரம் தொகுதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில், தொகுதியின் சில பகுதிகளில் முக்கிய கட்சி தொண்டர்களிடையே மோதல்கள் நடந்துள்ளன. போலீசாருக்கும், பா.ம.க. வினருக்கும் இடையிலும் மோதல் நடந்தது.

இந்த நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ.வும், அந்த கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவருமான வேல்முருகன் இன்று கோட்டையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை பகல் 11.40 மணிக்கு சந்தித்தார். அப்போது, ஒரு புகார் மனுவையும் அவரிடம் கொடுத்தார்.

இதுகுறித்து வேல் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பென்னாகரம் தொகுதி பா.ம.க. தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர் என்ற முறையில் தலைமை தேர்தல் கமிஷனர் நரேஷ்குப் தாவிடம் புகார் மனு கொடுத்துள்ளேன். தொகுதியில் போலீசாரும், அதிகாரிகளும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்.

தொகுதிக்குள் பிரசாரம் செய்யும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி, மற்றும் பா.ம.க. பிரமுகர்களின் வாகனங்களை வேண்டும் என்றே போலீசார் சோதனையிடுகிறார்கள். கெடுபிடி செய்கிறார்கள். ஆனால் அமைச்சர்கள், ஆளும் கட்சியினரிடம் கண்துடைப்புக்காக சோதனை நடக்கிறது.

பா.ம.க. தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. இதற்கு அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நரேஷ்குப்தாவிடம் மனு கொடுத்தேன். நேர்மையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று கூறினேன். எங்கள் குற்றச்சாட்டுகளுக்கான வீடியோ ஆதாரங்களையும் அவரிடம் கொடுத்தேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Source & Thanks : .maalaimalar

Leave a Reply

Your email address will not be published.