ரூ.2கோடிக்கு பங்களாக்கள், லட்ச மதிப்பில் ‘டிவி’க்கள், நகைகள் : அதிகாரியின் லஞ்ச ‘வைபோகம்

மும்பை :ஐயாயிரம் சதுர அடியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மாடி வீடுகள், ரூ. 40 லட்சத்தில் விலையுயர்ந்த ஏழு பிளாஸ்மா “டிவி’க்கள், 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள்… இது போதாதென்று, பங்களாவில் ஒன்பது லட்ச ரூபாயில் “ஜக்கூசி’ மற்றும் நீராவிக்குளியல் வசதி…இது கல்யாண சீர்வரிசை அல்ல…


ஒரு சாதாரண அரசு அதிகாரியிடம் இருந்த சொத்துகளின் பட்டியலில் கொஞ்சூண்டுதான் இவை.மும்பை டோம்பிவிலிப் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் ஜோஷி. இவர் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில், 1983ல் கண்காணிப்பாளராக வேலையில் சேர்ந்தார். தொடர்ந்து இளநிலைப் பொறியாளர், துணைப் பொறியாளர், செயற்பொறியாளர் பதவிகளைத் தன் தகிடுதத்தத்தால் அடைந்தார். இறுதியாக, மாநகராட்சியின், நகரத் திட்டப்பிரிவின் துணை இயக்குனரானார். கடைசியாக இவர் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் எல்லா சலுகைகளும் சேர்த்து 49 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.இதற்கிடையில், இவர் மூன்று முறை, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இவரது சக அதிகாரிகளைப் பொறுப்பேற்க விடாமல் ரவுடிக் கும்பலை வைத்து தாக்கியுள்ளார்.

இப்படிப்பட்ட “பின்னணி’ கொண்ட ஜோஷியை, ஊழல் தடுப்புக் குழு (ஏ.சி.பி.,) சமீபத்தில் கைது செய்துள்ளது. இந்தக் கைதின் போது ஜோஷியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சொத்து மதிப்புக்களின் பட்டியலை ஏ.சி.பி., வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலைப் பார்த்து மலைத்து விடாதீர்கள்….டோம்பிவிலியில், ஐயாயிரம் சதுர அடியில் மூன்று மாடிகள் கொண்ட, சகல வசதிகளும் அடங்கிய வீடு. இந்த வீடு ஒரு அரண்மனைக்கு நிகராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டின் உள் அலங்காரம் மட்டும் இரண்டு கோடி மதிப்புடையது. ஹோம் தியேட்டர், சுவரில் தொங்க விடக் கூடிய திரை, புரஜக்டர் இவற்றின் மதிப்பு ஐந்து லட்ச ரூபாய். மார்பளவிலான சிவாஜி சிலையின் மதிப்பு 52 ஆயிரம் ரூபாய்.

ஜோஷியின் படுக்கை அறையில் சகல வசதிகளும் கொண்ட குளியல் அறை. ஒரு சோனி “டிவிடி’ பிளேயர். 60 இன்ச் பிளாஸ்மா “டிவி'(ஒரு பிளாஸ்மா “டிவி’யின் விலை 1.70 லட்ச ரூபாய்).ஒரு அலமாரியில் 15 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், 150 சட்டைகள், 100 பேன்ட்டுகள், 40 டி-ஷர்ட்கள், 100 சேலைகள், 30 வெளிநாட்டு நறுமணப் பாட்டில்கள். வெளிநாட்டு விலையுயர்ந்த சரக்குகள் நிரம்பிய ஒரு பார். நான்கு வெளிநாட்டு கைக்கடிகாரங்கள். ஒன்றின் மதிப்பு மட்டும் 25 ஆயிரம் ரூபாய்.குளியலறையில் 40 இன்ச் பிளாஸ்மா “டிவி’ நீச்சல் குளம் போன்ற நவீன வசதிகள் கொண்ட ஒன்பது லட்ச ரூபாய் மதிப்புடைய “ஜக்கூசி’ பாத் டப். அமெரிக்காவில் படிக்கும் ஜோஷியின் மகன் அறையில் 40 இன்ச் பிளாஸ்மா “டிவி’ நூற்றுக்கணக்கில் டி-ஷர்ட்கள், சட்டைகள், ஜீன்ஸ்கள், ஜோஷியின் மகள் அறையில் 28 இன்ச் பிளாஸ்மா “டிவி!’

இதேபோல், பயன்படுத்தப்படாத ஒரு படுக்கையறையில், பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ்கள் 56, 80 ஆடைகள், 3.6 கிலோ வெள்ளி நகைகள், 17 லட்ச ரூபாய் மதிப் புள்ள தங்க நகைகள். மூன்றாவது மாடி, தனிப் பயன் பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி தளம் (ஜிம்). அந்த மாடியில் உடற்பயிற்சி இயந்திரங்களை, கிரேன் மூலம் கொண்டு வந்து வைத்ததாக ஜோஷியின் பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். இந்த அறையிலுள்ள பொருட்கள் 50 லட்ச ரூபாய் மதிப்புடையவை.மொத்தம் 41 மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின்பும் இந்தச் சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பை ஏ.சி.பி.,யால் கணக்கிட முடியவில்லை. அதனால் அவர்கள் பொதுப்பணித் துறையின் உதவியை நாடியுள்ளனர். இவை போக, புனேயில் வேறு ஜோஷிக்கு சொத்துக்கள் இருக்கின்றதாம். தொடர்ந்து, ஏ.சி.பி., ஜோஷி வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.