மத்திய அரசுக்கு லாலு பிரசாத் ஆதரவு வாபஸ்

உள் ஒதுக்கீடு வழங்காமல் தற்போது உள்ள நிலையிலேயே மசோதாவை நிறைவேற்றினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம் என்று லாலு பிரசாத் கூறியிருந்தார். அதன்படி இன்று அவர் வாபஸ் கடிதத்தினை அளிக்கவுள்ளார்.


மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளமும், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது லாலு பிரசாத், முலாயம் சிங் ஆகியோரின் கோரிக்கை ஆகும்.

இந்த உள் ஒதுக்கீடு வழங்காமல் தற்போது உள்ள நிலையிலேயே மசோதாவை நிறைவேற்றினால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவோம் என்று அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அறிவித்தனர்.

என்றாலும் தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே, அந்த கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி டெல்லி மேல்-சபையில் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

எனவே ஏற்கனவே அறிவித்தபடி, லாலு பிரசாத் இன்று (புதன்கிழமை) ஆதரவை வாபஸ் பெறுகிறார்.

இதுபற்றி நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நானும், முலாயம் சிங்கும் பிரதமரை காலையில் சந்தித்த போது, தற்போது உள்ள நிலையிலேயே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். எங்களுடைய வேண்டுகோளையும் மீறி மசோதாவை மேல்-சபையில் அரசு நிறைவேற்றி இருக்கிறது.

எனவே புதன்கிழமை (இன்று) ஜனாதிபதியை சந்தித்து, மத்திய அரசுக்கு ராஷ்டிரீய ஜனதாதளம் அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை கொடுக்க இருக்கிறேன்.

சபையில் இருந்து எம்.பி.க்களை வெளியேற்ற சபை காவலர்களை பயன்படுத்தியது, இதற்கு முன் நடைபெறாதது ஆகும். அவர்கள் பாராளுமன்றத்தை போலீஸ் நிலையம் ஆக்கி விட்டார்கள்.

இது சர்வாதிகாரம் மற்றும் நெருக்கடி நிலையின் தொடக்கம் ஆகும்.

மசோதா மீதான ஓட்டெடுப்பு விஷயத்தில் காங்கிரஸ் கட்சி திரிணாமுல் காங்கிரசின் நம்பிக்கையை பெறவில்லை என்று அதன் தலைவர் ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.

Source & Thanks : newindianews

Leave a Reply

Your email address will not be published.