பி.டி. பருத்தியால் கோடிக்கணக்கில் நஷ்டம்: ஆந்திராவில் மரபணு பயிர்களை அனுமதிக்க மாட்டோம் விவசாயிகள் போர்க்கொடி

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ விதை நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மரபணு பயிர் விதைகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த மரபணு பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் அமோகமாக இருக்கும். பூச்சிகள் தாக்காது என்று அந்நிறுவனம் கூறியது.

இதையடுத்து மத்திய அரசு முதன் முதலாக மரபணு (பி.டி.) பருத்தி பயிரிட அனுமதி அளித்தது. இதையடுத்து குஜராத், ஆந்திர விவசாயிகள் மரபணு பருத்தி விதைகளை மான் சாண்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.

ஆனால் அந்த மரபணு பருத்தியை பூச்சிகள் தாக்கியதால் விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் முரளி கூறியதாவது:-

மான் சான்டோ, மகிகோ போன்ற மரபணு விதை நிறுவனங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எங்களை ஏமாற்றி மரபணு பருத்தி விதைகளை அதிக விலைக்கு விற்றன. ஆனால் விளைச்சல் இல்லாததால் நாங்கள் கடனாளியாக மாறி விட்டோம். மரபணு பருத்தி பயிரிட்ட நிலத்தில் வேறு பயிர்களை பயிரிட்டோம். அதுவும் விளையவில்லை.

இதுபற்றி நாங்கள் வேளாண்மை விஞ்ஞானி களிடம் கேட்டபோது, மரபணு பயிர்களை விளை வித்த நிலத்தில் வேறு இயற்கையான பயிர்கள் விளைவிக்க முடியாது. அப்படியே அதில் பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. மரபணு பயிர்களை பயிரிடும் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்கள் அழிந்து விடும். இதனால் அந்த நிலம் தரிசு நிலமாக மாறி விடும் என்று எங்களிடம் கூறினார்கள்.

இதுபற்றி நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தற்போது மரபணு அரிசி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக அறிந்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் நாங்கள் ஆந்திராவில் மரபணு பயிர்களை பயிரிட அனுமதிக்க மாட்டோம்.

இந்திய இயற்கை விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மான்சான்டோ போன்ற சர்வதேச விதை நிறுவனங்களின் சதி செயலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.

மரபணு செடிகளை ஆடு மாடு மேய்ந்தால் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.