கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியர் : கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கரையூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவியரை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தொடர்பாக, தலைமை ஆசிரியையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ராமேஸ்வரம் கரையூரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும், குறிப்பிட்ட ஓட்டல்களில் டிபன் வாங்கி வரச்சொல்வதாகவும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் புகார் செய்தனர். நேற்று, குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி வராத மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜேம்ஸ் ஜெயசெல்வி அடித்துள்ளார். பாதிக்கப்பட்ட எட்டாவது படிக்கும் மாணவர்கள் ராஜ்குமார், நம்புகுமார், செல்வகுமார் ஆகியோர் கூறியதாவது: கழிப்பறையை மாணவியர் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அடிப்பார்கள். பள்ளியிலிருந்து 2 கி.மீ.,தொலைவில் உள்ள ஓட்டலில், டிபன் வாங்கி வரவேண்டும். வேறு கடையில் வாங்கினால் அடிப்பார்கள். செருப்பு தைக்க அனுப்புவார்கள், பள்ளியில் எதுவும் காணாமல் போய்விட்டாலும் மாணவர்களை அடிப்பார்கள் (அப்போது தலைமை ஆசிரியை அடித்ததால் கையில் ஏற்பட்ட காயத்தை காட்டி அழுதனர்).இவ்வாறு மூவரும் கூறினர்.
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியரிடம் பேசியபோது, அங்கு வந்த தலைமை ஆசிரியை, மாணவியரை மிரட்டி, இழுத்துச்சென்றார். இது தொடர்பாக கேட்க சென்ற பெற்றோர், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை , தலைமை ஆசிரியை தரக்குறைவாக பேசி, போலீசுக்கும் போன் செய்வதாக மிரட்டினார். தலைமை ஆசிரியை அழைத்ததின் படி, பள்ளிக்கு வந்த போலீசார், கூடியிருந்த பெற்றோர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இது தொடர்பாக, தகவல் அறிந்த மண்டபம் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சுரேஷ்குமார், சூசைதாஸ் ஆகியோர், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் நேற்று விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் , சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பெற்றோர்கள் தெரிவித்தனர்.
Source & Thanks : thatstamil
























