நவீன நூலகத்துக்கு 851 புத்தகங்கள் : முதல்வர் கருணாநிதி ஒப்படைப்பு
சென்னை : தமிழக அரசால் கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும், அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்திற்கு, தமிழக முதல்வர் கருணாநிதி, 851 அரிய புத்தகங்களை நன்கொடையாக நேற்று வழங்கினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உருவாகி வரும், அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்திற்கு, நூல்களை அளிக்கும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைக் கல்லூரிகளின் மாணவர்களைக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி முதல், “படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என, பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் புத்தகங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஏழு லட்சம் புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திருவாசகம் நேற்று, தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். முதல்வர் கருணாநிதி அவரிடம், தனது சொந்த தொகுப்பிலிருந்து 851 அரிய புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில், அதன் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், மருத்துவம் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்ட பலகோடி ரூபாய் மதிப்பிலான 22 ஆயிரம் புத்தகங்களை, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகத்திடம் வழங்கினார்.
இதுகுறித்து துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன் கூறுகையில், “”சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்துக் கொண்ட சமூக அக்கறையின் பேரால், “படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ திட்டத்திற்கு எங்களது துறை சார்ந்த பங்களிப்பை செய்துள்ளோம்,” என்றார். துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது: சென்னைப் பல்கலைக்கழகம், கல்வி தொடர்பான திட்டத்தோடு நின்று விடாமல், சமுதாய சிந்தனையோடு, “படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் வீடு, வீடாகச் சென்று புத்தகங்களைச் சேகரித்துள்ளனர். எங்களது எதிர்பார்ப்பை விட அதிக புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நானும் எனது பங்கிற்கு 10 ஆயிரம் புத்தகங்களை சேகரித்துள்ளேன்.
இன்று காலை, தமிழக முதல்வர் என்னையும், பல்கலைக்கழக மாணவர்களையும் அழைத்து, அவரது சொந்த தொகுப்பிலிருந்து 851 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆயிரம் புத்தகங்களை வழங்கியுள்ளார். தற்போது, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கொடுத்துள்ள மருத்துவத்துறை சார்ந்த புத்தகங்கள் விலை மதிப்பில்லாதது. ஏழை, எளிய மாணவர்களுக்கு இந்த புத்தகங்கள் பயனுள்ளதாக அமையும். இவ்வாறு திருவாசகம் பேசினார்.
Source & Thanks : dinamalar
























