சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தும்; ஆனால், ஆறு மாதத்திற்கு பிறகு தான்

சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவின் மனித உரிமை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் முன்னேற்றத்தை எட்டுவதற்கு சிறிலங்கா நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஐரோப்பிய ஆணைக் குழுவின் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக ஐரோப்பிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சிறிலங்காவுக்கான இந்தச் சலுகை நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரமாட்டாது. ஆறு மாதங்களுக்குப் பின்னரே நடைமுறைப்படுத்தப்படும்.

சிறிலங்காவுக்கான இந்த சலுகையை நிறுத்துவது பற்றிய முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பான ஆவணங்கள் ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி பிரசெல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் மாநாட்டில் சிறிலங்காவுக்கான சலுகை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்படும்.

அடுத்த ஆறு மாதத்துக்குள் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் நிறுத்தப்படக் கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமது நாட்டுக்கான ஜி.எஸ்.பி சலுகைத் திட்டம் தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகளுக்குப் பின்னர் சிறிலங்காவில் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

Source & Thanks : puthinappalakai.

Leave a Reply

Your email address will not be published.