ஜனாதிபதியை கொல்ல சரத் பொன்சேகா திட்டமிட்டார் : பாதுகாப்பு அமைச்சு

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல, இன்று மாலை ஊடகவியலாளர் மத்தியில் கருத்துரைத்த போது, கொழும்பின் இரண்டு ஹோட்டல்களில் இருந்து ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த கொலைகளுக்கு முயற்சித்தார் என்பதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் காலி வீதியில் அல்லது லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் என்பவற்றில் வைத்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக லக்ஸ்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பில் ஈடுபட்ட நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட 9 படையில் இருந்து தப்பி வந்தவர்களும் இந்த கொலை முயற்சியில் பங்கேற்கவிருந்தார்களா என்பது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இராணுவ ரீதியான பதில் கொடுக்கப்படும். அதன் போது மக்கள் வீதிக்கு இறக்கப்படுவார்கள் என சரத் பொன்சேகா ஏற்கனவே, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்ததாக உலுகல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் நேற்று மாலை 4 மணி அளவில் பொது மக்களை வீதிக்கு இறக்குவதற்கான சதி திட்டம் ஒன்றையும் சரத் பொன்சேகா மேற்கொண்டதாவும், படையில் இருந்து தப்பி சென்ற இராணுவத் துருப்பினர்களைக் கொண்டு ஜனாதிபதியினரையும், அவரது குடும்பத்தினரையும் சிறைபிடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான தகவல் பரிமாற்றங்கள், சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களால் பேஸ் புக் மற்றும் எஸ் எம் எஸ் ஊடாக பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் உட்பட்ட பெண் ஒருவரும் கைது செய்யப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகா இன்று மாலை தனது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.