பெரியாறு அணைக்கு சேதம் ஏற்பட்டால் கேரளா செல்லும் வழிகளை அடைப்போம்: மத்திய, கேரள அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை

posted in: தமிழ்நாடு | 0

கம்பம்: “”பெரியாறு அணைக்கு சேதம் ஏற்பட்டால், கேரளாவிற்கு செல்லும் அனைத்து ரோடுகளும் மூடப்படும்,” என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்டும் கேரள அரசை எதிர்த்து, தேனி மாவட்டம் கம்பத்தில், கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை மறித்து நேற்று ம.தி.மு.க., சார்பில் போராட்டம் நடந்தது.

வ.உ.சி., திடலில் இருந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் விவசாயிகளுடன், கேரளாவிற்கு செல்லும் கம்பம் மெட்டு பிரிவிற்கு வைகோ ஊர்வலமாக வந்தார். அங்கு நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசியதாவது: பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தினால், ஆயிரக் கணக்கானோர் பலியாவர்கள் என்று பொய்ப் பிரசாரம் கேரளாவில் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பதை தக்கவைப்பதா அல்லது எல்லாவற்றையும் இழப்பதா என்ற நிலையில் நாம் உள்ளோம். பெரியாறு அணைக்கு சேதம் ஏற்பட்டால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் 13 பாதைகளும் அடைக்கப்படும். இந்த பேராட்டம் ஒரு ஆரம்பம் தான். அணை பிரச்னையில் கேரள அரசும், மத்திய அரசும் கூட்டு சதி செய்கின்றன. பெரியாறு அணை பிரச்னையில், பிரதான குற்றவாளியான மத்திய அரசை கண்டித்து ஜன.,28 ல் ஐந்து மாவட்டங்களில் (மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்) உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு வைகோ கூறினார்.

இதை தொடர்ந்து வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., மாநில துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஐந்து மாவட்ட பெரியாறு அணை பாசன சங்க தலைவர் அப்பாஸ் மற்றும் விவசாயிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இரண்டு மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *