வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘கொட்டைப்பாக்கு’ வியாதிகளும்

posted in: தமிழீழம் | 0

முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு ஈழநாடு (பாரிஸ்) இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இன அழிப்பு யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை களத்தில் வெற்றி கொண்ட சிங்கள அரசு, கே.பி. அவர்களது கைதின் மூலம் விடுதலைப் புலிகளின் பொருளாதார வளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் விடுதலைப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அவற்றைக் கைப்பற்றும் திட்டத்தை இலங்கை அரசு செயற்படுத்தி வருகின்றது. கே.பி. அவர்களிடம் பெறப்பட்ட தகவலின்படி ‘பிறின்ஸஸ் கிறிஸ்டினா’ என்ற விடுதலைப் புலிகளது கப்பல் சிங்கள கடற்படையால் கைப்பற்றப்பட்டு, கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிங்கள அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ மக்களது பலத்தின் மீதும், வளத்தின்மீதும் சிதைவுகளை ஏற்படுத்திய சிங்கள அரசால், தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் கட்டமைப்பை சிதைக்க முடியவில்லை. புலம்பெயர் தமிழர் கட்டமைப்பு சிங்களச் சதிகள் நெருங்க முடியாத அளவிற்கு கட்டுக்கோப்புடனும், சிதைக்க முடியாத பலத்துடனும் தொடர்ந்தும் செயற்பட்டு வருவது சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் அடிவருடித் தமிழர்களுக்கும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களின் மக்கள் பேரவையினர் நடாத்திவரும் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான வாக்கெடுப்பு சிங்கள அரசுக்கு மட்டுமல்லாமல் இந்திய அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் தனித் தமிழீக் கோரிக்கைக்கும் முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று கருதியிருந்த சிங்கள – இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான கருத்துக் கணிப்பு புதிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரசாரம் செய்து, உலகின் பல நாடுகளை நம்பவைத்து, தமிழீழ மக்களின் அரசியல் விருப்புக்களை மறுதலித்த இந்த இரு அரசுகளும் விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே தனிநாடு கேட்டுப் போராடுகிறார்கள் என்ற மாயையை உலகில் உருவாக்கியிருந்தன. விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தித் தடை செய்த மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் சார்ந்த எந்த அமைப்புடனும் தெடர்புகளை ஏற்படுத்தவோ, அவர்களது வேண்டுகோள்களைச் செவிசாய்க்கவோ மறுப்புத் தெரிவித்தே வந்தன. இந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் பேரவலங்களின் பின்னர் புலம்பெயர் தேசங்களில் புதிதாக உருவாக்கம் பெற்ற மக்கள் பேரவைகள் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான வாக்கெடுப்பு மூலமாக, தமிழ் மக்களின் உறுதியான, இறுதியான, ஏகோபித்த முடிவு தமிழீழ தனி அரசே எனத் தாம் வாழும் நாடுகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்தீர்மான வாக்களிப்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் தொகையாக அணி திரண்டு கலந்துகொண்டதுடன் 99% ற்கும் அதிகமான மக்கள் தமிழீழமே தாகம் என்ற தமது விருப்பினையும் அறிவித்துள்ளார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் அவர்களை இரு துருவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சில அறிவு ஜீவிகளுக்கும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, நியாயப்படுத்த முடியாத தமிழின அழிப்பின் கோரங்கள் வெளியாகிவரும் நிலையில், புலம்பெயர் தமிழர்கள் ‘தமிழீழமே தீர்வு’ என்று தமது விருப்பை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தி வருவது பெரும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் என்பதனால் இந்த வாக்கெடுப்பை நடாத்த முடியாதபடி பல சதி முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

இதே வேளை, புலம்பெயர் தமிழர்களை இருதுருவப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அறிவு ஜீவிகளும் தமக்கான இருப்புக்களை மீள நிலை நிறுத்தும்பொருட்டு இந்த ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மக்கள் விருப்பைக் கொச்சைப்படுத்தி வருகின்றார்கள். ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது ஒரு கொட்டைப்பாக்கு அளவுக்குக் கூட பெறுமதியற்றது. எமது முகத்தில் நாமே பூசும் கரி. தமிழினம் தனக்குத் தானே இழைக்கும் ஒரு வரலாற்று அவமானம்’ என்றெல்லாம் சிங்கள அரசுக்கு நிகராகப் பரப்புரை செய்து வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்துள்ள இன்றுவரை அந்த மக்களின் அவலங்களுக்காக எந்தச் சிறு துரும்பையும் கிள்ளிப் போட்டதாக அறியப்படாத இவர்கள், இந்தப் பிரசாரம் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? என்பது அவர்களிடமே கேட்க வேண்டிய கேள்வி. இவர்களில் சிலர் தமது இரு துருவப்படுத்தும் பிரசாரங்களுக்கு ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைப்பையும் சாட்சிக்கு அழைக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் திரு. கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ முயற்சிக்கு தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பல நாடுகளிலும் அதற்கான செயற்குழுக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த பல படையணிகளும் செயலிழந்துள்ள இன்றைய நிலையில், உலகத் தமிழர் பேரவையும், நாடு கடந்த தமிழீழ அரசும் இரு படையணிகளாக, தமிழீழ இலட்சியம் நோக்கிப் பயணப்பட வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் இதய தாகமாக உள்ளது. இதில், பணிக்கான போட்டி இருக்கலாம், பதவிக்கான போட்டியாக மாறுவதை புலம் பெயர் தமிழர்கள் ஜீரணித்துக் கொள்ள மாட்டார்கள். உணர்வுள்ள பெரும்பாலான தமிழ்ப் பணியாளர்கள் இந்த இரு அமைப்புகளையும் பிரித்துப் பார்க்காமல், இரண்டிலும் இணைந்து பணியாற்றவும் பெரு விருப்புடனேயுள்ளார்கள்.

திரு. உருத்திரகுமார் அவர்கள் தெளிவான சிந்தையுடைய கல்விமான். தேசியத் தலைவர் அவர்களுடைய தமிழீழ இலட்சியத்தையும், அதற்கான அர்ப்பணிப்புக்களையும் நன்றாக அறிந்தவர். அந்த இலட்சியப் பாதையில் பயணிக்கும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்துப் பணியாற்ற வேண்டுமே அல்லாமல், குழிபறிக்க அனுமதிக்கமாட்டார் என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையை திரு. உருத்திரகுமார் காப்பாற்றுவார் என்று நாமும் நம்புகின்றோம்.

பாரிஸ் ஈழநாடு

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.