இந்தோனேசியா கைது செய்ய முயன்றால் படகை தகர்ப்போம்- தமிழ் அகதிகள்

மேரக் (இந்தோனேசியா): இந்தோனேசிய கடற்படையினர் எங்களைப் படகிலிருந்து இறக்க முயன்றாலோ அல்லது கைது செய்ய முயன்றாலோ நாங்கள் படகைத் தகர்த்து விடுவோம், நாங்களும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தமிழ் அகதிகள் மிரட்டியுள்ளனர்.
கிட்டத்தட்ட 260க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் சென்றபோது இந்தோனேசிய கடற்படையினர் அவர்களை வழிமறித்து மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றனர்.

தற்போது அவர்களை படகிலிருந்து இறக்கி கைது செய்ய இந்தோனேசிய கடற்படையினர் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் தங்களை இறக்க முயற்சித்தால் காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்து படகைத் தகர்த்து விடுவோம், நாங்களும் கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று தமிழர்கள் மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து படகில் உள்ள அலெக்ஸ் என்ற தமிழர் கூறுகையில், நாங்கள் காஸ் சிலிண்டர்களை வைத்துள்ளோம். எங்களை கடற்படையினர் இறக்க முயன்றால், நாங்கள் இதை வெடிக்கச் செய்து படகை மூழ்கடிப்போம். நாங்களும் கடலில் குதித்து விடுவோம்.

ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் கொடுத்து வந்துள்ளோம். யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியாவுக்குப் போய் அங்கிருந்து 13 நாட்களுக்கு முன்பு இந்த மரப் படகில் ஆஸ்திரேலியா கிளம்பினோம்.

நான் இங்கு இருப்பது இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிந்தால், யாழ்ப்பாணத்தில் உள்ள எனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர்கள் வேட்டையாடி விடுவார்கள். எனது மனைவி, குழந்தைகளும் விரைவில் என்னைப் போலவே நாட்டை விட்டு வெளியேறவுள்ளனர். விரைவில் நாங்கள் ஆஸ்திரேலியா போக வேண்டும் என்றார் அலெக்ஸ்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.