போர்க்களத்தின் கடைசி நாளில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, பொட்டு அம்மான் தற்கொலை: “த நேசன்” பத்திரிகை புதிய தகவல்கள்

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகையான “த நேசன்” செய்தி வெளியி்ட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதம் 18ம் தேதி நடந்த இறுதிக் கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் சுமார் 20 ஆயிரம் பலியானார்கள். அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை இறந்துவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தது. மேலும், அவரது படத்தையும் வெளியிட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.

மேலும், ஜனாதிபதி ராஜபக்சவின் தம்பி கோத்தபாய ராஜபக்ச, உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், அவரது உடல் மற்றும் ஆதாரங்கள் இல்லாமல் போனதால் பொட்டுவின் நிலைமை தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் த நேசன் என்ற இலங்கை பத்திரிகை பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை பொட்டு அம்மானின் உதவியாளர்களில் ஒருவராக இருந்த சசி மாஸ்டர் இராணுவத்திடம் கூறியிருப்பதாக தெரிகிறது.

அதில், பொட்டு அம்மான் தனது மனைவி, மகனுடன் போர்களத்தில் இருந்தார். மே 17ம் தேதி நடந்த தாக்குதலில் பொட்டு அம்மானின் மகன் பலியானான்.

இந்த சோகத்தால் அவரது மனைவி சயனைட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால், அவர் வைத்திருக்கும் சயனைட் சாப்பிட்டால் 30 நிமிடங்களுக்கு மேல் துடிதுடித்து சாக வேண்டியிருக்கும் என்பதால், பொட்டு அம்மான் அவரை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, மனைவிக்கு அமைதி தந்தார்.

பின்னர் போர்க்களத்துக்கு சென்ற அவர் விடுதலை புலிகள் படைத்தளபதிகள் சிலருக்கு முக்கிய உத்தரவு போட்டார். அப்போது இலங்கை இராணுவம் அவர்களது இருப்பிடத்துக்கு அருகில் வந்துவிட்டதால் அன்று இரவு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நேசன் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து உளவுத்துறையில் முக்கிய பதவியில் இருந்த இரத்தினம் மாஸ்டர், துரோணர், கீர்த்தி, நிரோஷன், மணிமேகலை, அன்பு மாஸ்டர், ஞானவேல் மாஸ்டர், முத்தப்பன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.

உளவுத்துறை தகவல்களை ஒருங்கிணைக்கும் விநாயகம் மாஸ்டர் இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் எங்கு பதுங்கியுள்ளார் என்பது தெரியவில்லை என்கிறது.

பிரபாகரன், பொட்டு அம்மான் இருவரும் மரணம் அடைந்து விட்டதாக கூறி வரும் சிங்கள அரசு, இந்தியாவுக்கு அவர்களது மரண சான்றிதழை கொடுக்க காலம் தாழ்த்தி வருகிறது. இந்தியா பல தடவை கேட்டும் இந்த விஷயத்தில் இலங்கை மெளனமாக உள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.