படையினர் அனுமதிக்கும் வரை ஒரு குடும்பம் கூட மீளக் குடியமர்த்தப்படமாட்டாது: மகிந்த

சிறிலங்காப் படையினர் தெளிவான அனுமதி வழங்காதவரை இடம்பெயர்ந்த மக்களில் ஒருவரைக்கூட மீளக்குடியமர்த்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

“அவர்கள் (அனைத்துலக சமூகம்) சொல்கிறார்கள் என்பதற்காக இந்த அப்பாவி மக்களை கண்ணிவெடிகள் உள்ள இடங்களுக்குள் தள்ளிவிட நான் தயாராக இல்லை. கண்ணிவெடிகளில் இருந்தும் பொறி வெடிகளில் இருந்தும் அந்த நிலம் விடுவிக்கப்பட்டதாகப் படையினர் பச்சை விளக்கு சமிக்ஞை தரும் காலம் வரைக்கும் ஒரு குடும்பத்தைக் கூட மீளக்குடியமர்த்தப் போவதில்லை” என்றார் மகிந்த.

தென் மாகாணத்தில் காணிகள் இன்றி வசிக்கும் 2 ஆயிரம் மக்களுக்கு காணிகளை வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசும் போதே மகிந்த இவ்வாறு கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் அங்கு கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

3 லட்சம் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர், அந்த மக்கள் விடுதலைப் புலிகளால் மனிதக் கேடங்களாகப் பயன்படுத்தப்பட்ட போது எதுவும் பேசவில்லை.

அதேபோன்ற வெட்கம் கெட்ட செயல்களை நாட்டுக்கு எதிராகப் பரப்புரை செய்வதன் மூலமும் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட கடன்களும் நிதிகளும் எங்கே போயின என்று எதிர்க் கட்சித் தலைவர் கேட்கிறார். அந்தப் பணத்தின் மூலம் அரசு என்ன அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு இருக்கின்றது என்பதை அவர் நாட்டின் தெற்குக்கும் கிழக்குக்கும் ஊவா மாகாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று பார்க்கட்டும்.

கடந்த நான்கு வருடங்களில் பெரியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அவர்கள் பார்க்க முடியும். அம்பாந்தோட்டையில் மிகப் பெரிய துறைமுகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒலுவில், காங்கேசன்துறை ஆகிய இடங்களிலும் துறைமுகங்கள் திருத்தி அமைக்கப்பட உள்ளன.

நுரைச்சோலை, கெரவலப்பிட்டிய, மேல் கொத்மலை மற்றும் திருகோணமலையில் பெரியளவிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு கடல் பகுதியையும் மூன்றில் ஒரு பங்கு நிலப் பகுதியையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகளிடம் வழங்கியிருந்தது ஐக்கிய தேசியக் கட்சி.

ஆனால், இந்த அரசு காணிகள் அற்றவர்களுக்கே அவற்றை வழங்கி வருகின்றது என்று மேலும் கூறினார் மகிந்த.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.