விண்வெளிக்கு மெசேஜ் அனுப்ப விருப்பமா?: ஆஸ்திரேலிய வெப்சைட் அதிரடி திட்டம்

கான்பெர்ரா: விண்வெளிக்குத் தகவல் அனுப்ப உங்களுக்கு விருப்பமா? ஆஸ்திரேலிய அறிவியல் பத்திரிக்கை “காஸ்மோஸ்’ சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, “ஹலோ ப்ரம் எர்த்’ என்ற வெப்சைட், இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வேற்றுக் கிரக மனிதர்களிடம் இருந்து உங்கள் மெசேஜுக்குப் பதில் கிடைக்குமா? கிடைக்குமானால், அதற்கும் நீங்கள் 40 ஆண்டுகளுக்குமேல் காத்திருக்க வேண்டும்.

என்ன தமாஷ் செய்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். உண்மையில் அறிவியல் பார்வையில் இதெல்லாம் சாத்தியமா, இல்லையா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். விஞ்ஞானிகள் எப்படியெல்லாம் தங்கள் ஆய்வை மேற்கொள்கின்றனர் என்பதற்கு, இந்தத் திட்டமும் ஒரு கட்டம் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள எட்டுக் கோள்களில் பூமியைப் பற்றித்தான் நமக்கு தெரியும். அதில் மனித வாழ்க்கை, இயற்கை போன்ற விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மற்ற கோள்களில் என்ன விதமான வாழ்க்கை இருக்கிறது என்பது, இன்னமும் மர்மம் தான்.

பல ஆண்டாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் சில தகவல்களைப் பெற முடிந்துள்ளது. இதுவரை செய்த பரிசோதனைகளை பார்த்தால், சில கிரகங்களில் உயிரின வாழ்க்கைக்கு ஏற்ற சில சாத்தியங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.ஆனால், எந்த அளவிலும் உறுதி செய்ய முடியவில்லை.

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள, கிரகம் “கிளீஸ் 581 டி’-ல் உயிரின வாழ்க்கைக்கு ஏற்ப சில சாத்தியங்கள் இருப்பதாக, விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். பூமியை விட அளவில் ஐந்து மடங்கு பெரிது இந்த கிரகம். சூப்பர் எர்த் என்றும் விஞ்ஞானிகள் இதை அழைக்கின்றனர்.

இந்தக் கிரகத்தில் மனிதர்கள் இருக்கின்றனரா? வாழ்க்கை இருக்கிறதா? என்பதெல்லாம் இன்னும் தெரியாத நிலையில் தான், விஞ்ஞானிகள் உள்ளனர். இந்தக் கிரகத்துக்கு பொது மக்களின் தகவல்களை அனுப்பும் வித்தியாசமான முயற்சியை, ஆஸ்திரேலிய வெப்சைட் ஒன்று மேற்கொண்டுள்ளது.

இந்த வெப்சைட் முகவரி: http://www.hellofromearth.net.. . ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் வாரத்தை ஒட்டி, இந்த வித்தியாசமான திட்டத்தை வகுத்துள்ளது இந்த வெப்சைட்.

விண்வெளிக்கு நீங்கள் தகவல் அனுப்பலாம். அதாவது, உயிரின வாழ்க்கைக்கான சாத்தியம் உள்ளதாகக் கருதப்படும் “கிளீஸ் 581 டி’ கிரகத்தில் உள்ள மக்களுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பலாம். மொத்தம் மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,போல, வார்த்தைகள் இருக்க வேண்டும். 160 எழுத்துக்களுக்கு மேல் இருக்கக்கூடாது.

வரும் 24 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வெப்சைட்டில் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி துறை, அமெரிக்க நாசா விண்வெளி மையம் ஆகியவற்றின் துணையோடு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 24 ம் தேதிக்கு பின், எல்லா மெசேஜ்களும் தொகுக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா ஆழ் விண்வெளி ஆராய்ச்சி தகவல் மையத்தின் மூலம், செயற்கைக்கோள் தொடர்பு மூலம், “கிளீஸ் 581 டி’ கிரகத்துக்கு அனுப்பப்படும்.

“கிரகத்தில் உள்ள மனிதர்களுக்கு இந்தத் தகவல்கள் போய்ச்சேர்கிறதோ இல்லையோ! ஆனால், இதுவும் அறிவியல் ரீதியான முயற்சி தான். எங்கள் கணக்குப்படி, இந்தத் தகவல்கள் போய்ச்சேரவே, 20 ஆண்டுகள் பிடிக்கும். அதன் பின்தான், அங்கிருந்து நமக்குத் தகவல் கிடைக்குமா என்பதே தெரியும்’ என்று, இந்த வெப்சைட் அதிகாரி வில்சன் டி சில்வா கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.