தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் செய்மதி தொலைபேசி குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உதவியதா?

நந்திக்கடற்களப்பில் பிரபாகரனுக்குச் சொந்தமானது என கைப்பற்றியதாகக் கூறப்படும் செய்மதி தொலைபேசியில் காணப்பட்ட மற்றொரு செய்மதி தொலைபேசி இலக்கத்தை வைத்தே தாம் குமரன் பத்மநாதன் நடமாட்டத்தை அறிந்ததாகவும், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று அதிகாரிகள் இத் திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

செய்மதி தொலைபேசியில் இருந்த இலக்கத்தினூடாக, மற்றைய செய்மதி தொலைபேசியின் இலக்கத்தைப் பெற்ற இலங்கை புலனாய்வுப் பிரிவினர், பின்னர் அது ஆசிய நாடு ஒன்றில் இருந்து பாவிக்கப்படுவதை அறிந்ததாகவும், சிங்கப்பூர், மலேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கும் இலங்கையில் இருந்து 3 புலனாய்வுப் பிரிவினர் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

குமரன் பத்மநாதனை கைதுசெய்வது தமது நோக்கமல்ல என்று தெரிவித்த அந்த அதிகாரிகள், அவரை சுட்டுக்கொல்லவே தாம் ஆட்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

எனினும் புதன்கிழமை மாலை அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்த அவ்வதிகாரிகள், இறுதி நேரத்தில் அவரை கொல்லும் திட்டம் மாற்றப்பட்டு, உயிருடன் பிடிக்குமாறு மேலதிகாரிகள் உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் தாய்லாந்து பிரதமர் அப்சிட் வெஜ்யஜிவா, தமது நாட்டில் வைத்து குமரன் பத்மநாதன் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாரா என அறியுமாறு தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க FBI பாணியில் வேற்று நாட்டில் ஊடுருவி, எதிரியை கைது செய்துள்ள இலங்கை அரசின் இச் செயலானது, இவ் இரு நாடுகளுக்குமிடையே உள்ள நல்லுறவைப் பாதிக்கலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *