மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான முரளிதரன் – டக்ளஸ் இடையில் கருத்து முரண்பாடு

மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் தேச நிர்மாண அமைச்சர் வி.முரளிதரனிற்கும், சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் தேவையில்லை என முரளிதரன் தெரிவித்து வரும் அதேவேளை, பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

13 வது திருத்தச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவாறு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு 13ம் திருத்தச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்படவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தில் திட்டமிடல், கல்வி, உயர்கல்வி, உல்லாசப்பிரயாணத்துறை, நீர்பாசனம், சுகாதாரம், விவசாயம், தொழில், சமூகசேவை, புனர்நிர்மாணம் உட்பட 36 விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முதலில் இவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பின்னர் அடுத்த கட்டமாக குறிப்பிடப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எனினும், தேச நிர்மாண அமைச்சர் முரளிதரன் கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் தேவையில்லை எனவும், மத்திய அரசாங்கத்தினால் சரியான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் முக்கிய தமிழ் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் காணப்படும் கருத்து முரண்பாடு எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.