முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்: துரைமுருகன் அறிவிப்பு

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கான உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக மற்றொரு அணை கட்ட அந்த மாநில அரசு முயன்று வருவது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்.), ஆறுமுகம் (பா.ம.க.), கோவிந்த சாமி (மார்க்.கம்யூ.), சிவ புண்ணியம் (இந்திய கம்யூ.), ஞானதாஸ் (ம.தி.மு.க.), ரவிகுமார் (விடுதலை சிறுத்தை) ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கேரள முதல்-மந்திரி பிரதமரை நாளை சந்திப்பதாகவும் புதிய அணை கட்டப்பட்டால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்ட மக்கள் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. எந்த வகையிலும் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

கேரள அரசு முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டப்போவதாகவும், இது தொடர்பாக பிரதமரை சந்திக்கப்போவதாகவும் அனைத்து கட்சி உறுப்பினர் களும் ஆதங்கமும், வருத்தமும் தெரிவித்தார்கள். பல்வேறு கருத்துக்களை அவர்கள் சொன்னாலும் ஒரே குரலில் சொல்லி இருக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை 1979-ல் ஆரம்பித்தது. அந்த அணை பலகீனமாக இருக்கிறது என்று ஒரு பத்திரிகை மூலம் புரளி கிளப்பப்பட்டது. அதன் பிறகு அணையை பலப்படுத்த எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போதும் தொடர்ந்து கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் நானே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைப்படி முல்லைப்பெரியாறு அணை பலப்படுத்தப்பட்டது. மத்திய நீரியல் நிபுணர்களும் நமது பொறியாளர்களும் 4 முறை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்தனர்.

மத்திய நீர்வள ஆணையமும், அணை பலமாக இருக்கிறது என்று தெரிவித்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கிலும் அணை பலமாக இருப்பதால் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீரை சேமிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பேபிடேங்க் சீரமைக்கப்பட்ட பிறகு 152 அடி தண்ணீரை நிறுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இதன் பிறகு கேரள அரசு புதிதாக சட்டம் நிறைவேற்றி முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த தடையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தமிழக அரசுக்கு சாதகமான நிலையிலேயே இருக்கிறது. 10.2.09 அன்று தீர்ப்பு வரும் நிலையில் அதற்கான நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகளில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றதால் தீர்ப்பு வருவது தாமதமானது. இதற்கிடையே கேரள அரசு புதிய அணையை கட்டப்போவதாக ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது. கேரள முதல்-மந்திரியும், அங்குள்ள விவசாயத்துறை மந்திரியும் பிரதமரை சந்தித்து இது தொடர்பாக பேசப் போவதாக செய்தி வந்திருக்கிறது. அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லட்டும். நம்மிடம் தான் நியாயம் உள்ளது.

தற்போது உள்ள அணை மிகவும் உறுதியாக இருக்கும் போது அந்த மாநிலத்தில் அரசியலுக்காக புதிய அணை என்ற புதிய பிரச்சினையை கிளப்புகிறார்கள். நமது முதல்-அமைச்சர் அண்டை மாநிலங்களை பகைத்துக் கொள்ளக்கூடாது. நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே அண்டை மாநிலங்களின் உறவுக்கு கை கொடுப்போம். உரிமையை இந்த அரசு விட்டுக் கொடுக்காது.

தமிழக மக்களை பாது காக்க, தமிழக மக்களின் உரிமைகளைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். பிரதமரை சந்திக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கூறினார்கள். அனைத்து கட்சியினருடன் சென்று சந்திக்கலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். அவர் உறுதி தருவாரேயானால் அதை நாம் செய்யத் தயார்.

நமது மாநில பிரச்சினையில் நமது பேதத்தை வெளியே காட்டக்கூடாது. இந்த முல்லைப்பெரியாறு பிரச் சினையில் எந்தவித நட வடிக்கை எடுக்க வேண்டுமோ அத்தனை நடவடிக்கை களையும் முதல்-அமைச்சர் கருணாநிதி எடுத்து வருகிறார். எனவே முதல்வரின் ஆலோசனையை பெற்று இந்த பிரச்சினை குறித்து வற்புறுத்துவதற்காக பிரதமரை எப்படி சந்திக்க வேண்டுமோ அந்த முறையில் நாம் சந்திக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Source & Thanks : .newindianews

Leave a Reply

Your email address will not be published.