தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்குமாறு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன:இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.

கடந்த பல நாட்களாக இந்த நாட்டில் ஒரு பகுதியினர் வெற்றிக்களிப்பில் மிதக்கின்றனர்.மிகப் பெருமளவு மக்கள் ஒரேநாளில் கொல்லப்பட்டனர். வெள்ளைக் கொடியை ஏற்றிச் சென்றவர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்கள் சிறைக் கூடங்களாயிருப்பதாக இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

தோழர்கள் கந்தசாமி, சோமபால ஆகியோரின் நினைவு தினம் கொழும்பு அண்ணாமலை மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சி முக்கியஸ்தர் வ.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்துபேசிய விக்ரமபாகு கருணாரட்ன; பெரும் துயரங்கள், பின்னடைவுகள், அழிவுகள் போன்ற யுகத்தை கடந்து செல்லவேண்டிய சூழலில் நாம் வாழுகின்றோம்.

1947 இல் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தின் போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தோழர் கந்தசாமி தனது இன்னுயிரை நீத்தார். உண்மையில் சமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா போன்றவர்களே துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிலையில் தோழர் கந்தசாமி தனது உயிரைக் கொடுத்து சமசமாஜக் கட்சித் தலைவரை காப்பாற்றினார்.

1980 இல் லேக்கவுஸ் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சோமபால தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1996 மே தினம் தடைசெய்யப்பட்டது. தடையை மீறி ஊர்வலம் செய்தோம். பொலிஸார் எம்மீது மிருகத்தனமாக தாக்கினர். 28 தொழிலாளர்கள் காயமடைந்தனர். உயர் நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவையடுத்து பொலிஸார் செய்தது தவறு என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று இடம்பெயர்ந்த மக்கள் இருக்கும் முகாம்கள் சிறைக் கூடங்கள் ஆகியுள்ளன. தினம் தினம் மக்கள் அங்கே இறக்கின்றனர். தொற்றுநோய்கள், போஷாக்கின்மை இம்மக்களை பெரிதும் வாட்டி வதைக்கின்றது. அங்கேயுள்ள மாணவ சமுதாயம் பாரிய இன்னல்களுக்குள் உள்ளனர். 10,000 இற்கு மேற்பட்டோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இன்று தமிழ் மக்களின் அவலநிலை உலக பிரச்சினையாக மாறியுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் வந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் கேட்ட 1.9 பில்லியன் கடன் கிடைக்காத நிலையில் காணப்படுகிறது. அன்று சர்வதேச நிறுவனங்களிடம் கடன்பட்ட போது இலங்கையின் இறைமை எங்கே போனது? அவர்கள் போட்ட நிபந்தனைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டே கடன்பட்டனர். கிடைக்கவில்லை என்றவுடன் எமது இறைமையை நாம் விட்டுக்கொடுக்க தயாரில்லை என்கின்றனர். எட்டாத பழம் புளிக்கும் என்பது போல் கதையுள்ளது. இன்று அரசாங்கம் எதிர்நோக்கும் அழுத்தம் என்ன? தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கு, என்பதே அழுத்தமாகும். உலக முதலாளித்துவ சக்திகளுக்கு அடிப்படையான சில விடயங்கள் உள்ளன. அதை நிறைவேற்றுவதில் அவர்கள் கடுமையாக இருப்பார்கள். இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் இன்று இவர்களுக்கு பாரிய தடையாக உள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக நாம் குரல் கொடுத்த போது எம்மை இனவாதிகள் திட்டினர். இன்று முதலாளித்துவ நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மனித உரிமை மீறப்படும் நாடுகளுக்கு உதவி வழங்கினால் அவர்களது நாட்டை அவர்கள் கண்டிப்பார்கள். இதன் காரணமாகவே மனித உரிமைகள் விடயத்தில் அவர்கள் கடுமையாக உள்ளனர். நாம் போரை நிறுத்த பல போராட்டங்களை முன்னெடுத்தோம். யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை செய்யுங்கள் என்றோம். யுத்தத்தின் அழிவுகளையும் கொடுமைகளையும் விளக்கினோம். எமது போராட்டத்தின் போது எம்முடன் நின்றவர்கள் கூட போர் வென்ற பின் போர் வெற்றியாளர்களாக மாறி கூத்தாடினர். போர் வெற்றி மயக்கத்தில் எங்களை கொல்ல வேண்டும் என்றனர்.

எங்களுக்கு எதிராக புரளிகளை பரப்பினர். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழ்ப் பத்திரிகைகள் வீதியில் போட்டு எரிக்கப்பட்டன. சாஸ்திரம் சொல்கின்றவர்கள் கூட சிறையில் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் எதிர்காலத்தை எப்படி நாம் பார்ப்பது. இராணுவத்திற்கும் மேலும் 3 இலட்சம் பேர் சேர்க்கப்படவுள்ளனர். வன்னிப்பகுதி உட்பட தமிழ் பகுதிகளில் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இராணுவம் என்பது இலங்கையில் முக்கிய தொழில் துறையாகவுள்ளது. இத்திட்டத்திற்கு எங்கே பணத்தை பெற போகின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்தனர்.இவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் என நெருக்குதல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் இடதுசாரி தலைவர்களுடன் இணைந்து செயற்பட ஒருபோதும் விரும்பவில்லை. பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்குக் கூட அவர்கள் எங்களை அழைக்கவில்லை. நாங்கள் திரும்ப திரும்ப சர்வதேச இடதுசாரிகளின் ஆதரவினை வலியுறுத்தினோம். அவர்கள் ஏற்கவில்லை. இன்று தமிழர் தாயகம் சாம்பல் ஆக்கப்பட்டுள்ளது.இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குமாறு பலமுனைகளில் அழுத்தங்கள் எழுந்துள்ளன. 13 வது திருத்தத்தில் ஒன்றுமே இல்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 13 வது திருத்தத்திற்கு மேல் என்றால் எதை கொடுக்க போகின்றார்கள். இன்று விமல்வீரவன்சவும் நானும் ஒன்றையே கதைக்கின்றோம். விமல்வீரவன்ச கூறுகின்றார் நாங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே, ஏன் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்கிறார். நானும் கேட்கின்றேன் அரசாங்கம் அதிகாரத்தை வழங்க தயார் என்றால் ஏன் மக்களை அநியாயமாக அழித்தீர்கள்.

இன்று தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒன்றை உணர வேண்டும்.தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைத்தால்தான் அதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு விமோசனம் கிடைக்கும். இல்லையெனில் ஒன்றுமே நடக்காது. அமெரிக்கா சுற்றுலாப் பயணிகளை தடுத்துள்ளது. நாடு மிகவும் பிரச்சினையின் காலகட்டத்தில் நிற்கிறது.

Source & Thanks : seithy

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil