ஜார்க்கண்டில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால், தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மாநில முதல்வராக இருந்த சிபு சோரன் தோல்வி அடைந்ததையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அதன்பிறகு முதல்வராக தேர்வு செய்வதில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் அங்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியை ராஜிநாமா செய்தது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 19-ம் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜார்க்கண்டில் தற்போது அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சி, வரும் ஜூலை 18-ம் தேதியுடன் முடிவடைவதால் இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி, மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
Source & Thanks : newindianews
























