இடம்பெயர் மக்களின் நலன்களைக் கவனிக்க 3 அரச அதிபர்கள் வவுனியாவில் இணைப்பு

வீரகேசரி இணையம் 4/25/2009 12:27:09 PM – போர்ப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வவுனியாவுக்கு வந்துள்ள பொதுமக்களின் நலன்கள் அடிப்படைத் தேவைகளைக் கவனித்துப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரசாங்க அதிபருக்கு மேலதிகமாக அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களும் வவுனியா மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிர்வாக நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியாக முன்னாள் யாழ். மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரிசிறியை அரசாங்கம் நியமித்துள்ளது.

இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான சேவைகளை இலகுபடுத்தும் நோக்கத்துடன் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் கோத்தபாய ஜெயரட்ண, இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் மற்றும் தங்குமிடங்களை அமைக்கும் பணிகளுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படவுள்ளார்.

உணவு மற்றும் சுகாதார, பொது வசதிகள் தொடர்பான பணிகளுக்குப் பொறுப்பாக பொலன்னறுவ மாவட்ட அரச அதிபர் டி.ஏ.லால் விமல் செயற்படவுள்ளார். நீர் விநியோகம், மின்சார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்குப் பொறுப்பாக அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.கே.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் இடம்பெயர்ந்தோரின் நலன்களுக்குப் பொறுப்பாக இருந்து செயற்படுவார். அனுராதபுரம், பொலன்னறுவை, கண்டி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் வெள்ளியன்று வவுனியா அரச செயலகத்திற்கு வருகை தந்து தமது பொறுப்புக்களை ஏற்றனர். அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நிவாரண இடைத்தங்கல் முகாம்கள், நிவாரண கிராமங்கள் என்பவற்றையும் சென்று பார்வையிட்டனர். E-mail to a friend

Source & Thanks : virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.